இலங்கை மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச மேற்பார்வையில் விசாரணை அவசியம் என வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டு மோதல்களின் போதுகாணாமல் போனவர்களின் உடல்கள் காணப்படலாம் என சந்தேகிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐந்து மனித சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

கடந்தகால குற்றங்களை கையாள்வது குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் தோண்டவேண்டும் என ஐந்து சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மனிதபுதைகுழிகள் குறித்து கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐந்துஅமைப்புகளும் இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளில் எவ்வாறு தலையிட்டன என்பது குறித்து முழுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெளிவான பார்வையில்-இலங்கையில் மனித புதைகுழியின் பின்னால் – உண்மையை தேடுதல் என்ற விவரணச்சித்திரமும் வெளியிடப்பட்டது – இந்த விவரணச்சித்திரம் காணாமல்போனவர்களின் உறவுகள் எவ்வாறு நீண்ட போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்பதை விபரிக்கின்றது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றியவேளை- மாத்தளை பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போனார்கள் அவ்வேளை அவர் அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக காணப்பட்டார் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அவரது பெயரையும் தனது விசாரணைகளின் போது குறிப்பிட்டிருந்தது என ஐந்து அமைப்புகளும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.