சில மேற்குலக நாடுகள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை இலக்கு வைத்து அதற்கெதிரான நடவடிக்கைகள் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகிறன. எவ்வாறிருப்பினும் எந்த காரணியை அடிப்படையாக் கொண்டும் இலங்கை மீது எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்று வெளியுறவுகள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளால் முன்வைக்கப்படுகின்ற பிரதான குற்றச்சாட்டுக்களான நல்லிணக்கம் , பொறுப்பு கூறல் மற்றும் காணாமல் போனார் விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு வெகுவிரைவில் பதிலளிக்கப்படும் என்றும் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறிய விடயங்கள் சுருக்கமாக வருமாறு,
ஐ.நா. விவகாரம்
இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றனவா என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? 2012, 2013, 2014 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலேயே இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை இலக்கு வைத்து ஏன் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஐ.நா.விடம் கேள்வியெழுப்புகின்றோம். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தவறானவையாகும். இலங்கை மீது யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.
கொவிட் சடலம்
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு சுகாதார மற்றும் மருத்துவ ரீதியிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டமையும் மருத்துவ ரீதியிலான காரணிகளின் அடிப்படையிலாகும். இவை அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அதற்கமைய இதுவரையில் சுமார் 69 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சில சமூகத்தினர் கவலையடைந்திருந்தமையை நாம் புரிந்து கொள்கின்றோம். அதற்கு எதிராக நாம் வாதாடவில்லை. எனினும் தற்போது அந்த தீர்மானத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
சிறுபான்மை மக்கள்
சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் சகல இன மக்களுக்காகவும் செயற்படுவதாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் ஒரு கருத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கிறீர்கள். நான் சகல மக்களுக்குமான ஜனாதிபதி என்றே அவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானது. 2015 – 2019 காலத்தில் காணப்பட்ட இரு கட்சிகளை பிரதானமாகக் கொண்ட தேசிய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் நாம் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளோம். எதிர்வரும் சில வாரங்களில் உண்மையான பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.
காணாமல் போனோர் விவகாரம்
2015 இல் இலங்கை அரசாங்கத்தால் இனை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 பிரேரணைக்கமைய காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்கமை காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களது உறவினர்களால் ஏன் பொலிஸ் நிலையத்திலோ அல்லது ஜனாதிபதியிடமோ முறைப்பாடளிக்க முடியும். அவர்களால் முறைப்பாடளிக்கப்பட்டால் அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறுபவர்கள் ஒரு சிலருடைய தேவைக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காணாமல் போனோல் , பொறுப்பு கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 2009 – 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் 3 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. எனினும் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை தொடர முடியாமல் போனது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதியால் தற்போது மீண்டும் இது தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
சர்வதேச நாடுகளின் தேவை
சில நாடுகள் அவற்றின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் பெருமளவான நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வோம்.
2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை இலங்கைக்கு எதிரான வாக்குகளில் ஒன்று குறைவடைந்துள்ளது. 14 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன. எனவே காலப்போக்கில் ஏனைய நாடுகளின் தீர்மானங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். எனவே வெகுவிரைவில் நல்லணிக்கம் , காணாமல் போனோர் மற்றும் பொறுப்புகூறல் என்பவற்றுக்கான பதிலை வழங்குவோம்.