அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 203 இலிருந்து 290 வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு இலங்கை ‘பணச்சபை முறைமையை’ ஸ்தாபிப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹன்க், மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளைச் செய்துவருகின்றார். அவ்வாறு செய்திருக்கும் பதிவொன்றிலேயே அவர் மேற்கண்ட விடயம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.
‘இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 26 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கக்கூடிய டொலர் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் அந்நாட்டிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன’ என்று ஸ்டீவ் ஹன்க் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு இலங்கையில் கடந்த 1884 தொடக்கம் 1950 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த ‘பணச்சபை முறைமை’ மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுத்தியுள்ளார்.
இலங்கை சிலோன் என்று அறியப்பட்ட காலப்பகுதியில் பணச்சபை முறைமை நடைமுறையில் இருந்ததுடன் 1950 ஆம் ஆண்டில் அம்முறைமை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.