பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று (12) நாட்டை வந்தடைந்தார்.
நவராத்திரி விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
இதேவேளை, இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அது உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் எனவும் இந்தியாவின் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் கடந்த ஜூன் மாதம் Times of India நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.
இராமர் பாலம் தொடர்பாக மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.
இராமர் இலங்கை வந்த போது வானர படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைக்கப்பட்டதாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை செயற்படுத்தி, இராமர் பாலம் வழியாக கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இராமர் பாலம் சேதமடைந்து விடும் என பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் விஜயம் செய்திருந்தனர். இதன்போது, உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இதனிடையே, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தலைமன்னாரிலுள்ள ராம சேது பகுதிக்கு சென்றிருந்தனர்.
புனித பிரதேசமாக ராம சேதுவில் பூஜை வழிபாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.