இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அத்துடன், அவர்களின் கருத்துகள் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் மக்களின் கருத்துகளையும் பிரதிபலிக்கவில்லை என்று ஆறு முக்கிய புலம்பெயர் அமைப்புகள் கூட்டு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளன. ஆறு அமைப்புகளும் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
இலங்கையின் அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தின் ஈடுபாடு அவசியம். புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் சிலரும் சிங்கள, பௌத்த மத குருமார்கள் மற்றும் தென்னிலங்கை சிவில் சமூகத்தின் ஒரு பிரிவினரும் அண்மையில் மேற்கொண்ட முயற்சி குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்தோம். புலம்பெயர் தமிழர்களில் தெரிந்தெடுக்கப்பட்ட – வரையறுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் மட்டும் இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகியிருப்பது துரதிர்ஷ்டம். உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு சிலரை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறது. பெரும்பான்மையான புலம் பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளை முழுமையாக உள்ளடக்கவில்லை.
கடந்த 2009 செப்ரெம்பரில் பிரான்ஸின் பாரிஸில் உருவாக்கப்பட்ட உலக தமிழர் பேரவை 10 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதித்துவத்துடன் உருவாக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை உலக தமிழர் பேரவையிலிருந்து தற்போது பிரிந்து விட்டன. பிரிட்டிஷ் தமிழ் மன்றம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், U.S.T.B.A.C. என முன்பு அறியப்பட்ட யுனைற்றட் ஸ்ரேற்ஸ் தமிழ் அக்ஷன் குறூப் (U.S.T.A.G.) போன்றவை உலக தமிழர் பேரவையிலிருந்து விலகிவிட்டன. இதனால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை அந்த அமைப்பு கொண்டிருக்கவில்லை.
வடக்கு, கிழக்கு, தமிழ் மக்களின் கருத்துகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் – புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை கொண்டுள்ள அமைப்புகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூக, சமய, பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுள்ளன.
இதன்படி, 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த மக்களும் அவர்களின் சந்ததியினரும் தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்யும் ஜனநாயக – அமைதி வழியான – நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு சர்வதேச கண்காணிப்புடனான வாக்கெடுப்பு அவசியம்.
வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள அதிகப்படியான இராணுவ பிரசன்னம் காரணமாக இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை நிறுவப்பட வேண்டும், மக்களுக்கு அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வழங்குவதற்காக இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும்.
இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். இனப் படுகொலை மற்றும் போர் குற்றத்துக்கு சர்வதேச நீதிமன்றில் விசாரணை – சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த அபிலாசைகளை புரிந்து கொள்ளுமாறும் – அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுமாறும் சிங்கள, பௌத்த மதகுருமார்கள் மற்றும் தெற்கு சிவில் சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய முற்போக்கான நடவடிக்கை அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிரூபிப்பதுடன், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு நியாயமான நீடித்த தீர்வை காணவும் பங்களிக்கும் மற்றும் பாதுகாப்பான – வளமான இலங்கைக்கு வழிவகுக்கும் – என்றுள்ளது.
இந்த கூட்டு அறிக்கையில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம் – அமெரிக்கா, யுனைற்றெட் ஸ்ரேற்ஸ் தமிழ் அக்ஷன் குறூப், உலக தமிழ் அமைப்பு – அமெரிக்கா ஆகிய அமைப்புகள் ஒப்பமிட்டுள்ளன.
- Australian Tamil Congress (ATC)
- Federation of Tamil Sangams of North America (FeTNA)
- Ilankai Tamil Sangam, USA
- Tamil Americans United PAC
- United States Tamil Action Group(USTAG)
- World Thamil Organization, USA