அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் வரத் திட்டமிடப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும், அதனை அவதானித்து வருவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“யுவான் வாங் 5” என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்,
“பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதை அரசு கண்காணித்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்.” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது நாட்டின் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் “சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையிட மாட்டார்கள் என சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.