இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. இவ்வருட இறுதிக்குள் தேர்தலுக்கான தினம் மற்றும் வேட்புமனு தாக்கல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு நிச்சயம் வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மார்ச் 20 க்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில் , பெப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக அமையும் என்று பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ள உதாசீனப்படுத்த முடியாத பொறுப்பிற்கு , எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

எல்லை நிர்ணய குழுவினால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இக்குழுவினால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் பாராளுமன்றமும் , நீதிமன்றமும் காணப்படுகின்றன. எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என்று எவரேனும்

கூறுவார்களாயின் , அவர்கள் அரசியல் மற்றும் சட்டம் என்பவற்றை அறியாதவர்களாகவே இருப்பர்.

தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வேறு எவராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. அதேபோன்று ஆணைக்குழுவிற்கு இதனை உதாசீனப்படுத்தவும் முடியாது.

இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கானதும் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை ஆணைக்குழு நிச்சயம் வெளியிடும் என எதிர்பார்க்கின்றோம்.

பெப்ரவரி 28 ஆம் திகதியே எம்மிடம் எல்லை நிர்ணய அறிக்கை கோரப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாம் எமது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது , தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனில் , பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு , முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயமாகும்.

எனவே எமது அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே , தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகிவிடும் என்றார்.