உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் : நெளபர் மெளலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பிரதான சம்பவங்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில், நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட பிரதிவாதிகள் அடங்குவதாக அறிய முடிகின்றது.

23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வாப்பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சீயோன் தேவா­லயம் ஆகி­ய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

இந் நிலையிலேயே இந்த பிரதான 8 குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.