உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டின்நிதி ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை இலங்கையின் வங்கிகள் வரவேற்றுள்ளன.
இலங்கை வங்கிகளின் சங்கம் அறிக்கையொன்றில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பை வரவேற்றுள்ளன.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் அறிவிப்பு உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை நிதிஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது வங்கி மற்றும் வங்கிசாராத நிதி நிறுவனங்களில் வைப்பிடப்பட்டுள்ள பணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற உறுதியான உத்தரவாதத்தை வரவேற்பதாக வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மறுசீரமைப்பு குறித்து அரசாங்கத்திற்குள் போதியளவு விவாதம் இடம்பெற அனுமதிப்பதற்காகவும் பொதுமக்கள் மற்றும் சந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவுமே ஐந்து நாள் விடுமுறை வங்கிதுறைக்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார் என இலங்கை வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிக்கவேண்டும் அதற்கு அமைச்சரவை பொதுநிதிக்குழு நாடாளுமன்றம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.
ஐந்துநாள் வங்கி விடுமுறையின் போது ஏடிஎம் ஒன்லைன் மற்றும் ஏனைய டிஜிட்டல் வழிமுறைகளை பயன்படுத்தி பொதுமக்கள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளதையும் இலங்கை வங்கிகளின் சங்கம் வரவேற்றுள்ளது.