வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது இன்றைய தினம் சனிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பெரும் எதிர்பார்ப்புக்களுடன் நிதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அவையில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதென்பது வினோதமானதொன்றல்ல. அது சம்பிரதாயபூர்வமான நிகழ்வே. இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதும் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் நாட்டின் புத்திஜீவிகளும் அவரவர் பார்வையில் இந்த வரவு செலவுத்திட்டத்தினை விமர்சித்தனர்.
இந்த வரவு செலவுத்திட்டத்தை நான் சார்ந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பார்வையிலும் எமது கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வையிலும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை விமர்சிப்பது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது என நினைக்கின்றேன்.
69லட்சம் வாக்குகளை அள்ளிக் கொண்ட ஜனாதிபதியும் 3ல் இரண்டு பெரும்பான்மை பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தம்மை ஆதரித்த மக்களால் அடித்துத் துரத்தும் அளவுக்கும் தமது பதவிகளைத் தாமே இராஜினாமா செய்யும் அளவுக்கும் நாட்டின் நிலைமை சென்றது ஏன். மேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்ற ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியிருந்தார். சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லப்படும் இந்த நேரத்தில் இது குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என்று வினவியதுடன் நாம் தவறிய இடம் எது எனவும் இந்த சபையில் வினா எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வியினையே நான் கேட்கின்றேன். எங்கே தவறு நடந்து என்பது இன்னமும் உங்களுக்குத் தெரியாதா. எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை இன்னமும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? நாம் தவறிய இடம் எது என்பதை இன்னம் நீங்கள் உணரவில்லையா? ஒரு காலத்தில் இலங்கை நாடு என்றால் உலகம் தலை நிமிர்ந்து நின்று பார்த்த நிலைமை மாறி, இன்று கடன் செலுத்த முடியாத ஒரு நாடு, தனது வங்குரோத்து நிலையை தானே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நாடு என்ற நிலைமைக்கு செல்வதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிந்தும் அறியாதவர்கள்போல் இருக்கின்றீர்களா?.
இந்த நாட்டின் பொருளாதார வளத்தை அபிவிருத்தி நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக கடந்த மூன்று தசாப்த்துக்கும் மேலாக யுத்தம் நோக்கித் தள்ளினீர்கள். இந்த யுத்தம் தந்த விளைவே இன்றைய பொருளாதாரப் பிரச்சினை. இனப்பிரச்சினையே முதற் காரணம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை பாதுகாப்புச் செலவீனம் விழுங்கிக் கொண்டது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற பிராந்திய வல்லரசுகளின் யுத்தப் பாதீட்டை விட எமது நாட்டின் யுத்தத்துக்கான பாதீடு வானளாவ உயர்ந்து நின்றது. யுத்த காலத்தில் தான் இந்த நிலை என்றால், யுத்தம் மௌனித்து 13 வருடங்களாகியும் யுத்தப் பாதீடு எமது நாட்டின் வருமானத்தின் பெருந்தொகையினை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்காக இன்னமும் இந்தளவு பெருந் தொகையினை ஒதுக்கித்தான் ஆகவேண்டுமா?
நமக்கு எந்த அயல் நாட்டினது அச்சுறுத்தலுள்ளது. எந்த அண்மைய நாடுகளின் அச்சுறுத்தலுள்ளது, உள்நாட்டில் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எங்கிருந்து வருகின்றது. இந்த நிலையில் பாதுகாப்புக்காக பெருந்தொகை நிதியை ஒதுக்கி யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கின்றீர்கள்.
பாதுகாப்புச் செலவீனத்துக்கு இவ்வளவு தொகை ஒதுக்கியும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4000 ரூபா கொடுப்பனவை 2500ஆகக் குறைத்துள்ளீர்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகளான பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் எவ்விதமாற்றமுமில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை.
இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் மேதகு ஜனாதிபதியவர்கள் இலங்கையின் வரலாற்றைக் கற்;பதற்கு தனியான நிறுவனத்தைத் தாபிப்பது தொடர்பான முன்மொழிவொன்றினை செய்துள்ளார். இதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் பார்வையில் வரலாறு என்பது சிங்களும் பௌத்தமும்தான். வரலாற்று மூலாதாரம் என்பது மகாவம்சம் தான். இந்த மகா வம்சம் மகாநாம தேரரின் கற்பனை என்பதை நீங்கள் இன்னமும் புரியாதது ஏன். முதலில் புரிந்து கொள்ளுங்கள் பௌத்தம் மதம். சிங்களம் மொழி. பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் எந்த விதமான இணைப்பும் தொடர்பும் இல்லை.
பௌத்தம் இலங்கையில் மட்டுமல்ல. தென்னாசியா, தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியுள்ள ஒரு மதம். அந்தந்த நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழியில் அவர்களுக்கு ஏற்ற வகையில் அதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வழிபடும் மதம். இலங்கையில் கூட தமிழ் பௌத்தம் இருந்துள்ளது. தென்னிந்தியாவில் தமிழ் பௌத்தம் தமிழ்ப் பௌத்தப்பள்ளிகள் இருந்துள்ளன. இதன் விளைவாகவே சீத்தலைசாத்தனார் சீவக சிந்தமணி எனும் தமிழ்ப் பௌத்த காவியத்தைப் படைத்தார். இதே போலவே நாதகுத்தனார் குண்டலகேசி என்னும் பௌத்த தமிழ்க் காவியத்தைப் படைத்தார். அமுதசுரபி அட்சய பாத்திரம் தந்த பௌத்த துறவி மணிமேகலை சுத்தத் தமிழிச்சி. பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் தொடர்பு ஏற்பட முன்னர் பௌத்தத்துக்கும் தமிழுக்கும் ஏற்பட்ட தொடர்பும் பிணைப்பும் முந்தியது. பௌத்தம் சிங்களத்துக்குமான தொடர்பு பிந்தியது.
வரிக் கொள்கை தொடர்பான உங்களது உண்மையான நேர்மையான கொள்கை என்ன? நீங்கள் உங்கள் வரவு செலவுத்திட்டத்தில் எடுத்துரைத்தது போல நாட்டு நலனுக்கான வரிக் கொள்கையினை செயற்படுத்துவீர்களா? எமது நாட்டின் கடந்த கால வரிக் கொள்கையினை நோக்கும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கமிசன் கொடுப்பவர்களுக்குமான வரிக்கொள்கையே எமது நாட்டில் இருந்தது.
நாட்டின் வருமானத்தின் முக்கிய மூலாதாரம் வரி வருமானங்கள். நாட்டின் பொருளாதார நிலைமைக்கேற்ப நாட்டின் மக்கள் வாழ்நிலைக்கேற்ப நாட்டு மக்கள் மீது அதிகரித்த சுமையினை ஏற்படுத்தாது வருமானத்தை பெறுவதற்கேற்ப வரி வருமானங்களைப் பெறுவதே அரசாங்கத்தின் வரிக் கொள்கையாக இருக்க வேண்டும். இது நம் நாட்டில் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக நடந்ததா? ஒரேயொரு உதாரணம் சீனி வரி. உங்கள் வரிக் கொள்கை தொடர்பாக சிந்தியுங்கள்
இலங்கை அரசியல் என்றால் அரசியல்வாதிகளென்றால் அதன் ஒருவரி வரைவிலக்கணம் ஊழல், கமிசன், இலஞ்சம் என்பதேயாகும். இது ஒருவரை மட்டுமல்ல ஒரு அரசாங்கத்தை மட்டும் சுட்டி விரல் நீட்ட அல்ல. மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அனைத்து அரசுகளுக்கும் இது பொருந்தும். ஒரே உதாரணம் மத்திய வங்கி ஊழல், சீனிக் கமிசன். இதைவிட மேலும் விபரிக்கத் தேவையில்லை.
உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக கூறியுள்ளீர்கள். அரச சேவையின் சுதந்திரத்தை அரச உத்தியோகத்தர்களின் சுதந்திரத்தை அவர்களது ஆளுமையை முடங்கச் செய்தது யார்? வெள்ளைக்காரன் தந்த சோல்பரி அரசியல் யாப்பில் சுயாதீனமாக இயங்கிய பகிரங்க சேவை ஆணைக்குழு (Pரடிடiஉ ளுநசஎiஉந ஊழஅஅளைளழைn) நீதிச் சேவை ஆணைக்குழு (துரனiஉயைட ஊழஅஅளைளழைn) ஆகியவற்றின் சுதந்திரத்தை முடக்கியது யார். டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபடுகிறோம் என்று மார்தட்டி 1972ல் கொண்டு வந்த குடியரசு அரசியல் யாப்பு முதல் இன்று வரை அரசாங்க உத்தியோகத்தர்களின் சுதந்திரமும் கௌரவமும் ஆளுமையும் அரசியல்வாதிகளின் காலடியில் விழுந்துள்ளது.
இந்த நிலைமையை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மாற்றுமா? அது மாத்திரமல்ல அரச சேவையில் இன விகிதாசாரப் பதவிமுறை நிட்சயம் பேணப்பட வேண்டும். இன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் எத்தனைபேர் தமிழர்கள். வெளிவிவகார சேவையில் எத்தனை பேர் தமிழர்கள். அகில இலங்கை சேவையில் உள்ள உயர் பதவிகளில் எத்தனை பேர் தமிழர்கள். நியதிச் சபைகளின் உயர் பதவிகளில் எத்தனைபேர் தமிழர்கள். கூட்டுத்தாபனங்களின் தலைவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்.
நான் இனவாதம் பேசவில்லை. மொழி வாதம் பேசவில்லை. நீங்கள் அரச சேவை மறுசீரமைப்பு தொடர்பாக முன்மொழிவினைச் செய்துள்ளதனால் இதனைக் கூறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டுள்ளேன். இதற்குக் காரணம் என்ன. எம் தமிழ் நிருவாக உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் காலடியில் கிடக்கத் தயாரில்லை. பதவியிலிருந்தாலும் அரசியல்வாதிகளின் உத்தரவுக்கும் அவர்களின் ஊழல்களுக்கும் ஏற்ப கடமைபுரியத் தயாரில்லை. இதனால் அரச சேவை தனிச்சிங்கள மயமாகியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு மேதகு ஜனாதிபதியவர்களே உங்களுக்குண்டு.
இதில் பரிகசிக்க வேண்டிய விடயம் மத்திய வங்கி ஆளுனராக நிவாட் கப்றாலை நியமிக்கும் போது ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துடைய மத்திய வங்கி ஆளுனராக நியமித்து அவரை நிதி அமைச்சர் கூட கட்டுப்படுத்த முடியாத தற்துணிவை வழங்கும் அளவுக்கு எமது அரச சேவை இருந்ததை நான் நினைவுறுத்த விருப்புகிறேன்.
கௌரவ நிதி அமைச்சர் வனப்பரம்பல் அதிகரிப்புப் பற்றிக் கூறியுள்ளார். பாராட்டுகிறேன். ஒரு நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு குறிப்பிட்ட விகிதாசார அளவு வனப்பரம்பல் தேவை. ஆனால் நடப்பது என்ன? இந்த நாட்டின் வனவளத்தை, இந்த நாட்டின் நீர் வளத்தை, இந்த நாட்டின் நில வளத்தை அழித்தது இந் நாட்டு மக்களல்ல. அந்தந்த காலத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதேச சபை உறுப்பினர்கள் இவற்றை அழித்தார்கள்.
வடகிழக்கின் நீர் வளமோ, நிலவளமோ, வன வளமோ இவர்களால்தான் அழிக்கப்படுகிறது. இதனை நாம் எத்தனை தடவை எடுத்துரைத்தோம். காது கொடுத்துக் கேட்டீர்களா. காலம் கடந்த ஞானம் இது. கனியுமோ எனக்குத் தெரியாது.
பாற்பண்ணை உற்பத்தி தொடர்பாகக் கூறினீர்கள் கிழக்கில் பாற் பண்iணாயளர்களின் பண்ணை வளர்ப்புப் பிரதேசங்களான மயிலத்தமடு, மாதவணை, கந்தர்மல்லிச்சேனை போன்ற பிரதேசத்தை கிழக்கின் ஆளுனர் சிங்களக் குடியேற்றமாக மாற்ற முயற்சித்தார். எங்கள் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை. இப்படியெனில் எப்படி பாலுற்பத்தி அதிகரிக்கும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முக்கியமானது அந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் என்பது மக்கள் ஆணை ஊடாகவேயாகும். இதற்காக மக்கள் தமது விருப்பத்தினை வழங்குவதற்காக உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். வெற்றி பெறுவோமோ தோல்வியடைவோமோ என்ற அச்சத்தில் ஜனநாயகப் பண்பினை மிதித்து சீரழித்து விடக்கூடாது. எமது கௌரவ ஜனாதிபதியவர்களை நான் ஒரு ஜனநாயக கனவானாகவே இன்றும் மதிக்கின்றேன். அவரது அரசாங்கம் தோல்வியடைந்த போது தனது உத்தியோக பூர்வ மாளிகையிலிருந்து அடுத்த நிமிடம் தனது கையில் தனது ப்பிரீவ் கேசை சுமந்தபடி வெளியேறிய காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால், எமது நாட்டில் இதுவரை கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை. எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கான முற்றான தீர்வல்லாவிடினும் முதற் புள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபை ஜனநாயக அடிப்படையில் இயங்க முடியாது ஆளுக்காள் சட்டக்காரணங்களைக்கூறி அவர் மீது இவர் குறை சுமத்தி மாகாண சபைத் தேர்தல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. எமது ஜனாதிபதி உண்மையிலேயே ஒரு ஜனநாயகக் கனவானாக இருந்தால் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களைவிட மாகாண சபைத் தேர்தலினை விரைவாக நடத்தி மாகாண சபையினை மக்கள் நிர்வாகமாக மாற்றி அமைத்து ஆளுனரின் அதிமேலான அதிகாரத்திலிருந்து குறைந்தபட்சமேனும் விடுவிக்க வேண்டும்.
பழப்ப தோசமோ கூடிய கூட்ட தோசமோ எமது ஜனாதிபதியவர்கள் தனது ஜனநாயகக் கனவான் என்ற பெயரைக் காப்பாற்றுவாரா?
மேதகு ஜனாதிபதியவர்கள் தமது வரவு செலவுத்திட்ட முன்மொழிவை ஆரம்பிக்கும் போது தனது வரவு செலவுத்திட்டமானது சமூகப் பாதுகாப்பு, திறந்த பொருளாதார முறையான வரவு செலவுத்திட்டம் என எடுத்துரைத்தார். இதற்கு நீங்கள் அளித்த விளக்கம் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் கூறும் சமூகப் பாதுகாப்பு என்ன? இன்றும் கூட நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணாக பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளது. ஆறு மாதங்களுக்கு மாத்திரமெனக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 43 வருடங்களாகத் தொடர்கிறது. வட கிழக்கு தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அண்மையில் முஸ்லிம்களைத் தொட்டது. இன்று சிங்கள இளைஞர்களின் மீது பாய்கின்றது. இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் தேவையா என்பதை உங்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவான சமூகப் பாதுகாப்பு என்பதன் ஊடாக நான் கேட்கின்றேன்.
எப்போதும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்திப்பவர்கள் தமிழர்கள் அல்ல. சந்தர்ப்பவாதிகளாகச் சிந்திப்பவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. தமிழர்கள் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுக்க முன்னர் சமஸ்டி பற்றிய எண்ணக்கருவை எடுத்துரைத்தவர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் கோரவில்லை. 13 பிளஸ் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் முன்னிலையில் எடுத்துரைத்தவர் மகிந்த ராஜபக்ச அவர்கள். இவர்தான் ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று தன் சிங்களத் தமிழில் எடுத்துரைத்தவர். ஆனால், இன்றுவரை எதுவுமே நடந்ததில்லை.
அன்று ஒரு அரசாங்கம் தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சி அதனை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும். அன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிராந்தியங்களின் கூட்டமைப்பு என்ற அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை இன்றைய ஜனாதிபதியவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து தீக்கரையாக்கினார். ஆனால் இன்று காலம் கனிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அன்று இனவாதிகளாக பிரகாசித்த சிலர் தவிர அனைவரும் அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஒரு நேர்கோட்டில் வந்துள்ளனர். இது காலம் கடந்த ஞானமோ அவர்களின் மனச்சாட்சி உறுத்தலோ தெரியாது. இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் தவற விடாது நடந்து கொள்வோமானால் எமது அடுத்த வரவு செலவுத்திட்டம் இந்த நாட்டின் சுபீட்சத்தை நோக்கியதாக அமையக் கூடிய வகையில் அடுத்த நிதி அமைச்சர் இருப்பார் என்பதை இந்த உயரிய சபையில் எடுத்துரைக்கின்றேன்.
ஏனெனில் இன்றைய பொருளாதாரச் சீரழிவுக்கு இனப்பிரச்சினையே அடிப்படை. நீங்கள் ஆணிவேரை அழித்துவிட்டு பக்க வேரில் மரத்தினை வளர்ப்பதற்கு முயலாதீர்கள். முறையான அத்திவாரமின்றி முழுமையான கட்டடத்தை ஆக்க முயலாதீர்கள். இந்த வரவு செலவுத்திட்டத்தினை இவ்வளவு தூரம் சிரமப்பட்டு இவ்வளவு தூரம் மக்களுக்குச் சுமையேற்றித் தயாரித்ததற்குக் காரணம் இனப்பிரச்சினைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எமது நாடு தீர்க்கமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை. இதற்கு யார் காரணம் என்பதையும் சொல்லத் தேவையில்லை. நாட்டு மக்கள் இதனை அறிவார்கள். அதனால் தான் ஜனநாயகத்துக்குப் புறம்பாக மக்கள் புரட்சி ஒன்று இலங்கை அரசியலில் நடந்துள்ளது. ஆனால், நடந்த மக்கள் புரட்சி மூலம் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மலர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்றால் விடை பூச்சியம். வீதியில் நின்றவர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளார்கள். வீதியில் இறந்தவர்கள் வீட்டுக்குள் இறக்கின்றார்கள். இதை உங்கள் வெற்றி என்கின்றீர்களா?
எமது மக்கள் எமது நாட்டுக்காக எந்தவிதமான துயரங்களையும் எதிர் நோக்கத் தயார். ஆனால், பொருளாதாரத்தின் நன்மைகள். நாட்டின் வளப்பங்கீடுகள் அனைவருக்கும் சமமாக, நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இன, மத, மொழி, பால் வேறுபாடின்றி சகலருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டும். இதனை நீங்கள் என்று செய்வீர்கள். இதனை நீங்கள் என்றோ செய்திருந்தால் இன்று எமது நாடு தென்னாசியாவில் மட்டுமல்ல. தென்கிழக்காசியாவில் மட்டுமல்ல. உண்மையிலேயே ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்ந்திருக்கும். நீங்கள் நாடு என்று கருதுவது வடக்கை கிழக்கை அல்ல. இன்றும் கூட வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கே நீங்கள் முயற்சிக்கிறீர்கள். வடக்கு மட்டும் தமிழர்களின் தாயகப் பூமியல்ல. வடக்கு கிழக்கு மாகாணமே தமிழர்களின் தாயக பூமி. 1881ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை சற்றுக் கவனமாக நோக்குங்கள். வட கிழக்கு தமிழர் தாயகம் சுதந்திரத்தின் பின்னர் எவ்வாறு உங்கள் குடியேற்றங்களாலும் உங்கள் அபிவிருத்தித் திட்டங்களினாலும் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
எமது கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அது ~பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை’ யென்று. அது போல்தான் இந்த வரவு செலவுத்திட்டமும்.
இறுதியாக கடும் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி கொடுத்த சூழ்நிலையில் பிரதமராகி ஜனாதிபதியாகி நிதியiமைச்சராக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு காலம் கொடுத்த அதிஸ்டம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை உங்கள் காலத்தில் தீர்க்கப்பட்டது என்ற வரலாறு, எமது நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் ஏழுதப்பட வேண்டுமா இல்லை நீங்களும் உங்கள் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை போன்றவர்தானென்று வரலாறு உங்களைத் தூற்றவேண்டுமா, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத் தரப்பினரையும் எதிர்க்கட்சியினரையும் இணைத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உங்கள் கையில் உள்ளது. இதனை முறையாகப் பயன்படுத்தி இலங்கை வரலாற்றில் நீங்கள் வரலாற்று நாயகனாக உயர்வடைய வேண்டும். இதற்கு உங்களுக்கு அந்தத் தைரியமும் பலமும் கிடைக்க நாங்கள் எமது ஆதரவினை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
இன்று எதிர்க்கட்சியினர் அனைத்துமே இணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டால் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஒன்றுகூடி பொது அறிக்கை ஒன்றைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் தெற்குக்கும் மக்களிடையே தங்களுடைய பலத்தைப் பரீட்சித்துப்பார்ப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகவே இருக்கும். அடுத்து பாராளுமன்றத் தேர்தலோ, ஜனாதிபதித் தேர்தலோ வந்தால் தங்களுடைய பலத்தை நீரூபிப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றீர்கள். ஆனால், நாங்கள் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களோ நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 4 வருடங்கள் கடந்து விட்டது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்து விட்டது. அங்கு ஆளுனர்களின் அதிகாரமே இருக்கின்றது. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அந்த மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும்.