கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் காத்திரமாக்க வேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேயரட்ண மற்றும் பிரதி அமைச்சர் பி. ரூவான் செனரத் ஆளுநர் என்.வேதநாயகன் உள்ளிட்டவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையர் அலுவலக கேடபோர் கூடத்தில் இன்று (27.08.2025) புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர். இச் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,
உள்ளூராட்சி மன்றங்களிள் ஆளணி வெற்றிடம் நாட்டின் பிறபாகங்களைக் காட்டிலும் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆளணி வெற்றிடத்தினை நாட்டின் ஏனைய மாகாணங்கள் தேர்தல் காலத்திற்கு முன்னரான விசேட சுற்று நிருபங்களுக்கு அமைய நியமித்துக்கொண்ட போதும் எமது மாகாணத்தில் வெளிவாரிப்பணியாளர்களாக சனசமூக நிலையங்கள் ஊடாக நியமிக்கப்பட்டிருந்தமையினால் துரதிஸ்டவசமாக எம்மால் இந் நியமனங்களுள் பயனடைய முடியவில்லை. தசாப்தக் கனக்கில் பல தொழிலாளிகள் நியமனத்திற்காக ஏங்குகின்றார்கள். இவ்விடயத்தில் அமைச்சர் அவர்கள் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத்தாக்கல் செய்து பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியமனத்தினை விரைவு படுத்தக்கோருகின்றோம். தொழிலாளர்களின் பிரச்சினை என்ற வகையில் இந்த அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கும் என நம்புகின்றோம்.
மேலும் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தில் எதிர்வரும் ஆண்டில் இருந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்திவரும் இருபது விகித பணத்தினை நாற்பது விகிதமாக அதிகரிக்க வேண்டிய அறிவுறுத்தல் உள்ளது. இதனை எமது சபைகள் தாங்கிக்கொள்வதில் பாரிய பிரச்சினை உள்ளது. எனவே அரசின் இக் கொள்கையில் மாற்றத்தினைக் கோருகின்றோம். அதேவேளை சபைகளின் வருமானம் பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகையில் சபையின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட அளவீட்டு முறைமை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் சபைகளின் நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை என்பன வேறுபட்டுள்ளன. ஆகவே சபைகளின் வருமானம் கணக்கிடப்படும் போது நிலப்பரப்பு மற்றும் சனத்தொகைக்குமான சூத்திரம் பின்பற்றப்படவேண்டும். அதுவே சரியான புள்ளிவிபரத்தரவுகளை வழங்கும். அபிவிருத்திக்கு அது அவசியமாகும்.
மேலும் உள்ளூராட்சி சேவை மூடப்பட்ட சேவையாக அமைகளில் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் மக்களுக்கு ஆற்றப்படும் அரச சேவையினை வினைத்திறனாக்க முடியும். உள்ளூராட்சி மன்ற தாய்ச் சட்டங்கள், நியமத்துணைவிதிகள், துணைவிதிகளை கற்றுள்ள மற்றும் அனுபவப்பட்ட உத்தியோகத்தர் குழாம் மீளவும் உள்ளூராட்சி சேவைக்குள் ஈடுபடுத்தப்படுவது சிறந்தது. அவர்களை எழுந்தமானமாக மத்திய அரசாங்கத்தின் திணைக்களங்களுக்கு இடமாற்றக் கொள்கைகளுக்குள்ளாக இடம்hற்றுவதைத் தடைசெய்யும் தேசிய கொள்கை நாட்டில் ஏற்படுத்தப்படவேண்டும். புதிது புதிதாக உத்தியோகத்தர்கள் திணைக்களங்களில் இருந்து இடமாற்றலாகி வருவது மத்திய அரசாங்கத்தின் ஓர் திணைக்களம் போலவே உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குகின்றது.
அத்துடன் இப்போது மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இவ் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைப்பரப்பில் வருகின்ற விடயங்களுக்கான செயற்பாடுகளுக்கு ஏனைய அமைச்சுக்களுக்கு நிதியை ஒதுக்கி அதன் வாயிலாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமான பிரதேச செயலக வாயிலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம்.
உள்ளுராட்சி மன்றங்களின் பகிரப்பட்ட அதிகாரங்களை மீறப்படாது மாகாண சபை முறைமை ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக நிதியை ஒதுக்க வேண்டும். கிள்னி சிறிலங்கா திட்டத்தின் வாயிலாக உள்ளூராட்சி மன்றங்கள் முகாமை செய்யும் பஸ்தரிப்பிடங்களின் முடிவுகளைக் கூட மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தினர் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.