முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் சபையில் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பியான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.
கடந்த சனிக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர் முள்ளியவாய்க்கால் கிழக்கில் காலை செய்தி சேகரிப்புக்காகச் சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை ஒளிப்படம் எடுத்துள்ளபோது அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட பச்சைப் பனை மட்டையால் தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமானது எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன் தாக்குதல் நடத்திய 3 இராணுவத்தினர் கண்துடைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில்கூட ஆஜர்செய்யப்படாது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று குற்றஞ்சாட்டிய தமிழ் எம்.பிக்கள், நாட்டில் இராணுவ ஆட்சி நடப்பதற்கு இந்தத் தாக்குதல் சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டனர்.