எட்டாவது நாள்; வேடர் சமூகமும் போராட இணைவு!

ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் எட்டாவது நாளாகவும் காலி முகத்திடலில் நடாத்தி வரும் போராட்டத்தில் வேடர் சமூகமும் இணைந்துள்ளது.

நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டம் போன்று காலியிலும் மக்கள் ஒன்று கூடி போராட ஆரம்பித்துள்ளதுடன் அங்கும் மக்கள் குவிந்து வருகின்றனர்.

எனினும், அமைச்சரவையை மாற்றியமைத்து தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள கோட்டாபய ராஜபக்ச கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.

நேற்றிரவு நடந்த போராட்டத்தில் மற்றுமொரு கலைஞர் குழுவினரும் கலந்து கொண்டனர்.

நேற்று இரவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.