மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. அதுதான் தற்கால பேசுபொருளாகவும் இருக்கின்றது. இலங்கையில் பொறுப்புக்கூறலானது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.
ஓவ்வொரு முறையும் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத்தொடர்களிலும் பாதிக்கப்பட்ட எமது தமிழர் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்பர். கடந்த சில தவைகளில் நேரடியாகப் பங்குபற்றாமல் இங்கிருந்து மெய்நிகர் வழியாக இங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை கடிதம் மூலமாக அனுப்பி வைக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் கூட தற்போதைய கூட்டத் தொடருக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது.
அதேபோன்று விபரமாக இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்புகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக நடைபெறும் கைதுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து விபரமான அறிக்கையை அனுப்பியிருந்தார்கள்.
அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மெய்நிகர் மூலமாக இந்த ஐந்து கட்சித் தலைவர்களுடன் உரையாடியிருந்தார்கள். இந்த ஐந்து கட்சிகள் அனுப்பிய விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான அறிக்கையில் உள்ளடங்கியிருக்கிறது. ஆணையாளரினால் அங்கத்துவ நாடுகளுக்கு 13 பக்க அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையில் ஐந்து கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தருகின்றது.
மனித உரிமை ஆணையாளரின் குறுகிய அறிக்கை நிமித்தம் மெய்நிகர் மூலமாக உரையாடிய அதிகாரிகள், இலங்கையில் பொறுப்புக்கூறல் முறையாக நடைபெறவில்லை. இலங்கையில் சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியிருக்கின்றார். அத்தோடு இந்திய அரசாங்கத்தின் சார்பில் பங்குபற்றிய அதிகாரி, 13வது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் சமத்துவமாக, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு கொண்டு வரப்பட்டு மிக விரைவாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எமக்கான தீர்வு மிக விரைவில் வரும் என்பதில் ஓரளவுக்கு நிம்மதியடையக்கூடியதாக இருக்கின்றது.
இந்த அளவில் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஒருகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, அரசியல் ரீதியாக போராடிய கட்சிகள் 2009களுக்குப் பிற்பாடு இக் கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பிளவுபடுவதற்கான காரணங்கள் ஓரளவுக்கு தெரியாமலில்லை. இந்த விடயத்தில் நாங்கள் நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாகத்திற்கு கடிதம் எழுதியது போன்று ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோhக இருந்தால் இன்னமும் விரைவாக, கூடுதலான பெறுபேறுகளைப் பொற்றுக் கொள்ள முடியும்.
அந்தவகையில், பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை அனைத்துக் கட்சிகளிடமும் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.