எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் படும் வேதனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றி இன்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் படுகின்ற துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பலதரப்பட்டோரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தொழிலின்மை ஆகியவற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சாதாரணமக்கள் எரிபொருளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் நாட்கணக்கில் வீதிகளில் கிடக்கின்றனர்.
இந்த அவலத்துக்கு மத்தியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களின் வேதனையை நேரிலே சென்று பார்ப்பதற்க்கு சக்தியற்று போயுள்ளனர்.
தங்களை தெரிவுசெய்த மக்கள் மனித அவலத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில் அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்காமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது.
அங்கு நடக்கும் அராஜகங்களை மக்களுடன் நின்று தட்டி கேட்பதற்கு ஒருவருக்காவது சக்தி இருக்கின்றதா? என அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
தெற்கில் கொலைக்களங்களாக மாறிவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போல வடக்கிலும் தோன்ற வேண்டும் என்பது தானா உங்களது விருப்பம்? எத்தனை காலங்கள்தான் வேடிக்கை மனிதர்களைபோலவே இவர்கள் செயற்பட போகின்றார்கள்? மக்கள் இனியாவது இவர்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் செயற்பாடு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி நிற்கின்றது.
வரிசையில் நிற்கும் பொதுமக்களுடன் முரண்படுவது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது என பொலிஸாரின் அடக்குமுறைக்கு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.
எரிபொருள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட வேண்டும்: செ.மயூரன் | Fuel Should Be Provided All Parties
நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் எரிபொருள் வழங்கப்படும் தினத்தில் வருகைதரும் பொலிஸாரால் முன்னுரிமை அடிப்படையில் தமது வாகனங்களில் முழுமையாக எரிபொருளினை நிரப்பி செல்கின்றனர்.
இதற்கு நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் உடந்தையாக செயற்படுகின்றனர். மக்களை காக்க வேண்டிய பொலிஸார் அதனை புறம் தள்ளி சட்டமும் நீதியும், சாதாரண மக்களுக்காகத்தான் என்பதுபோல அவர்களின் செயற்பாடு உள்ளது.
இவை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுக்க வேண்டும். உங்களை தெரிவுசெய்த சாதாரண மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.
எரிபொருள் என்பது அனைவருக்கும் அத்தியவசியமானது. அதனை அனைத்து தரப்புகளிற்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.