எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். அதை அந்த உரையாடலில் கலந்துக்கொண்ட எல்லா கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். என்னை பொறுத்தவரையில், அகில இலங்கை தமிழரசு கட்சி மட்டுமல்ல, இந்த பொது நோக்கில் இணைந்து செயற்பட விரும்பும் எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே என எண்ணுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆனால், அகில இலங்கை தமிழரசு கட்சி பிரதானமான கட்சி என்பதால், முதலில் அந்த கட்சி உள்வாங்கப்பட வேண்டுமெனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த உரையாடல் ஏற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் தலைவர் நண்பர் செல்வம் அடைக்கலநாதனின் அழைப்பின் பேரிலேயே நாம் கலந்துக்கொண்டோம். அடைக்கலநாதன் எம்பியினதும், அவரது கட்சியினதும் இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது எனவும் நான் எண்ணுகிறேன்

ஆனால், இத்தகைய உரையாடல் தமிழ் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.