எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது : தாய்நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பலத்துடன் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எனவே இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும். அது எம்மால் முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பு – கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். சுயநலத்திற்காக கோபமும் , விரோதமும் தலைதூக்குகியிருக்கிறது.

இலங்கைக்குள் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையை நாம் என்று மாற்றப் போகின்றோம்? நாம் என்று புதியதொரு தொடக்கத்திற்குச் செல்லப் போகின்றோம்? அது தொடர்பில் சிந்திப்பதற்கான காலம் தோன்றியுள்ளது.

ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எம்மால் தொடர்ந்தும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது.

நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைவரையும் ஊழல்வாதிகளாகவே காண்கின்றோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி , அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாகவுள்ளனர். 74 ஆண்டுகளுக்குள் எமது அழகிய தாய் நாடு சீரழிந்துள்ளது.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றுதல் , பொய் மற்றும் ஊழல் என்பவற்றின் உச்சகட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்களை எதிர்கொண்ட விதமும் , அவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முறைமையுமாகும்.

முழு நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. எம் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர். நாம் நேர்மையாக செயற்பட வேண்டும்.

வரலாற்றில் பல தவறுகளை இழைத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியும் என்றார்.