ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்-ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூறுவதற்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதை போன்று 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தம் இறந்த உறவுகளை நினைவு கூற இடையூறுகள் புரியாது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது பூரண அனுமதியை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் மனித நேய அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் அதுவே உண்மையான ஐனநாயகப் பண்பு அந்த வகையில் தெற்கில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது வடக்கு கிழக்கில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தல் நீதி அல்ல.

பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆறுதலுக்கும் அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கும் மீண்டும் இவ்வாறான அவலம் ஏற்படாதிருப்பதற்கும் ஐனநாயக விரோத தடைகளை நிறுத்தி நினைவு கூறலை மேற்கொள்ள அனுமதிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதே உண்மையாக இந்த நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் புதிய வழியை உருவாக்கும் இதனை பிற்போக்கான அடிப்படைவாத கோட்பாட்டில் மூழ்கிப் போய்யுள்ள பெருந் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டு்ம்.

சகோதர இனமான தமிழர்களை புறம் தள்ளி அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்காது காலத்தை கடத்தி விடலாம் என தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர் நினைத்தால் சில ஆண்டுகளில் மீண்டும் அந்நிய சக்திகளின் முழுமையான காலணித்துவத்தில் நாடு சிக்கி சீரழியும் நிலை உருவாகும்” என்றார்.