ஐமசவை கலைக்கும் நாள் ஜனாதிபதியின் கையில்!

சஜித் பிரேமதாசவின் ஐமச மற்றும் பல கட்சிகள் இணைந்து அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணிக்கான ஆரம்பகட்ட வேலைகளை

நிறைவடைந்துள்ளன. இந்தக் கூட்டணி, எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.

சஜித்தின் புதிய கூட்டணிக்கான ஆரம்பகட்ட வேலைகள், ஐமசவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சஜித்தின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார முகாமையாளராக சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நாட்களில், மறுசீரமைப்புக் பணிகளைக் கவனிக்க நாடு முழுவதும் சுற்றித்திரியும் சுஜீவ, நிலைமை நன்றாக இருக்கிறதென்று சஜித்துக்கு அறிக்கையும் சமர்ப்பித்திருக்கிறார். மரிக்கார் உள்ளிட்ட பலருக்கு பிரச்சாரப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தூதரக ஒருங்கிணைப்பு பொறுப்பு வெலிகம ரெஹான் ஜெயவிக்ரமவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது பிரச்சார செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கமான மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஐமச உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐமசவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இந்தக் கட்சியின் தலைவரே எங்கள் வேட்பாளராக இருப்பார். வேறு எந்தக் கட்சித் தலைவர்களும் நியமிக்கப்பட மாட்டார்கள். எங்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை அனைவருக்கும் தெரியும்” என்று, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சியின் பலமான அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத் தளத்தை உருவாக்கவுள்ளதாக, டலஸ் குழுவின் முக்கியஸ்தராக பேராசிரியர் ஜிஎல் பீரிஸ், தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

எனினும், டலஸ் சஜித் பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது. புதிய கூட்டணியின் துணைத் தலைமையை டலஸ் கோரியிருந்தார், ஆனால் சஜித் முடியாதென்று கூறிவிட்டார். தேவையென்றால், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஐமசவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தென்று அறிவிக்கப்பட்டாலும், ஐமச அரசாங்கத்தின் பிரதமர் யாரென்ற போட்டி நிலவுகிறது. டலஸ் போன்றே, ரஞ்சித் மத்துமபண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜிஎல் பீரிஸ், ரொஷான் ரணசிங்க ஆகியோரும் பிரதமர் பதவியை எதிர்பார்த்துள்ளனர். அந்த விடயம் தொடர்பில் சஜித்துடன் நெருக்கமாக இருக்கும் ஐமசவில் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டபோது பின்வருமாறு கூறினார்.

“இப்போதே பிரதித் தலைவரை நியமித்தால், கூட்டணிக்கு வர எதிர்பார்த்து சஜித்துடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிவரும் கட்சித் தலைவர்களும், அரசாங்க அமைச்சர்களும் குழம்பிப் போகலாம். ஜனவரி மாதம் கூட்டணியை அறிவித்த பின்னரும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும்தான் அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்கள் வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சம்பிக்க, தயாசிறி, சுசில் போன்றவர்கள் வந்தால் அவர்களுக்கும் பதவி வழங்க வேண்டும். எனவே, அந்த பதவிகள் அனைத்தையும் ஜனவரியில் நிரப்பப் போவதில்லை. அனைத்துத் தொகுதி அமைப்பாளர் பணிகளும் நிரப்பப்படவில்லை. மஹரகம ஆசனத்தை ஷம்பிக்க அல்லது சுசிலுக்கு ஒதுக்கியுள்ளோம். டலஸ் வருவதை நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவருக்கு துணைத்தலைவர் என்ற பதவியைக் கொடுக்கமுடியாது” என்று, லீடர் டிவிக்கு சஜித்தின் நண்பர் சொன்னார்.

இருப்பினும், கட்சியுடன் இணையும் புதியவர்களால் ஐமசவுக்கு பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறதென்று, ஜனாதிபதியின் சகாக்கள் சிலர் காத்துக்கொண்டிருப்பதாகவும் வதந்திகள் உள்ளன.

ரணிலுக்கு விசுவாசமாக இருக்கும் எம்பிக்களை, தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் களட்டி எடுக்க ரணில் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குள் காலம் கடந்திருக்கலாம்!