சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வந்துள்ளார்.
இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்தார்.
அடுத்ததாக , திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கிறார் நரேந்திர மோதி.
நரேந்திர மோதி தமது பிரசார உரையைத் தொடங்கும் முன் எல். முருகன் அவருக்கு வேல் ஒன்றை வழங்கினார். ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று கூறி தமது பரப்புரையைத் தொடங்கினார் நரேந்திர மோதி.
தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரம் வந்தது தமக்கு மகிழ்ச்சி என்று மோதி குறிப்பிட்டார்.
உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம், என நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான திமுகவின் திண்டுக்கல் ஐ. லியோனி, ஆ. ராசா ஆகியோரின் பேச்சுகளையும் மோதி தமது உரையில் விமர்சித்தார்.
ஆண்டாள், ஒளவையார் ஆகியோரது கருத்துகளால் ஊக்கம் பெற்ற தாங்கள் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் மோதி கூறினார்.
கொங்கு பகுதியில் உள்ள மக்கள் தொழில் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்; அதேபோல இரக்க குணத்துக்கும் பெயர் பெற்றவர்கள். கடந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்கள் சக்திக்கு மீறி நாட்டுக்கு பங்காற்றின. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.
நரேந்திர மோதியின் ஆங்கில உரையை கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.