மாலியில் நிலைகொண்டு ஐ.நா அமைதிப்படையில் கடைமையாற்றும் இலங்கை இராணுவத்தினர் கவச வாகனங்கள், இராணுவ வாகனங்களுக்கான ரயர்கள் மற்றும் விமானங்கள், உலங்குவானூர்தி , ஏனைய வாகனங்களுக்கான உதிர்ப்பாகங்கள் இன்றி தமது கடைமைகளை முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 240 இலங்கை இராணுவத்தினர் மாலியில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் உதவிகளை கொண்டு செல்லும் வாகன தொடரணிகளுக்கு 1200 km வரையான தூரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரஷ்ய மற்றும் சீனதயாரிப்பு கவச வாகனங்களை பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். வாகன உதிரிப்பாகங்கள், ரயர்கள் இன்றி இக் கவச வாகங்களில் பல சேவையிலீடுபடுத்தப்படாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளன. மோசமான காலநிலை மற்றும் வீதிகள் காரணமாக விமானப்படையினரின் விமானங்கள், ஆயுத தளபாடங்களும் பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளன.
இதுவரையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பல்வேறு குழுக்களால் நடாத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், வெளிநாடுகளில் அமைதி காக்கும் படையினருக்கு சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் சீனாவில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் அருண ரணசிங்க, மேற்படி ஹெலிகாப்டர்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகளுக்கான நிதி 2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் இலங்கைக்கு 24 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.