மனித உரிமைப் பேரவையின் அண்மையில் நடந்த அமர்வில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பில், மனித உரிமை பாதுகாப்பதற்கான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், சுயாதீன நீதி பொறிமுறையினால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட விடயங்கள் எவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் கூற தவறிவிட்டார். யுத்தக் குற்றங்களுக்கான தண்டனையின்மை நீடிக்கிறது. விசாரணைகள் நடத்தப்படவில்லை.
குறிப்பாக, அரசியல் யாப்பிலே அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பொது மன்னிப்பு பொறிமுறை ஒன்று ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு கீழ் வருகின்றது. அதில் பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய எங்களுடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்களை விடுதலை செய்யாமல் யுத்த குற்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்கிறார்கள்.
இதுதான் மனித உரிமையை பேணுவதற்கு அரசியல் யாப்பிலே உள்ள ஏற்பாடா? அல்லது அதன் அடிப்படையில்தான் மனித உரிமை கோட்பாடுகளை அரசாங்கம் மதித்து நடப்பதற்கான எடுத்துக்காட்டா? என்ற கேள்வி சர்வதேச சமூகம் முன் எழுகின்றது.
அடுத்ததாக யுத்தத்துக்கு பின்னரான பரிகார நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும், பொறுப்புக் கூறல், நல்லிணக்க நடவடிக்கைகள், உள்ளக பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.
உள்ளக பொறிமுறையின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த நல்லிணக்க நடவடிக்கைகள் என்ன? பொறுப்புக் கூறல் நடவடிக்கை என்ன? என்பதை அவர் தெளிவாக குறிப்பிட தவறியுள்ளார். எந்த விதமான நல்லிணக்க நடவடிக்கைகளோ, பொறுப்பு கூறலுக்கான எந்தவித ஆரம்பகட்ட முயற்சியோ, அரசாங்கத்தால் கொள்ளப்படவில்லை. மாறாக நினைவேந்தல் நிகழ்வுகளையும் நீதிகோரி அமைதியாக நடாத்தப்பட்ட படும் ஜனநாயக போராட்டங்களையும் கொடூரமான முறையில் அரசால் தடுக்கப் படுவது நல்லிணக்க நடவடிக்கையா?
மேலும் சர்வதேச சமூகம் வலியுறுத்திய பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்காமல், தவிருத்து வருகிறது. குறிப்பாக ஐநாவோடு தாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற தயார் என கருத்துக்களை தெரிவித்திருக்கின்ற ஜி.எல்.பீரிஸ் அவர்கள், அதே நேரம் ஐநாவினுடைய தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்ற பிரேரணையையில் உள்ள சரத்துக்களை தாங்கள் முற்று முழுதாக நிராகரிப்பதாக அதே உரையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இலங்கையினுடைய விருப்பம் இல்லாமலேயே கடந்த நாற்பத்தியாறு ஒன்று பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அது உள்ளக பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறல் நல்லிணக்க முயற்சியை பாதிக்கிறது என்பதையும் அவர் தன்னுடைய உரையிலே கூறியிருக்கிறார்.
இது மிகவும் வேடிக்கையானது மாத்திரமல்ல ஐநா மனித உரிமை பேரவையிலே அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளைக் கூட ஒரு கேளிக்கையாக எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
எந்த விதமான பொறுப்புக் கூறலையும், நல்லிணக்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத அரசாங்கம் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை திரட்டுகின்ற தாங்கள் நிராகரிப்பதாக கூறி இருக்கிறார். யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கின்றார். யுத்த குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெறவில்லை என்றால், அதற்கான விசாரணை பொறிமுறையை எதிர்கொள்வதில் எதற்கு இவர்கள் தயக்கம் காட்ட வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.
அமெரிக்க வதிவிட பிரதிநிதியிடம் வெளிநாட்டு தலையீடுகளை தாங்கள் விரும்பவில்லை என்றும், அந்த அழுத்தங்களை நிராகரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். ஆகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தனது உரையிலே கூறி கொண்டு மனித உரிமை யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல், மற்றும் பொறுப்பு கூறல், நல்லிணக்கம் போன்ற முக்கியமான விடயங்களை ஐநா மனித உரிமை பேரவை பரிந்துரைத்தும் அவற்றை நிராகரித்ததோடு மாத்திரமல்ல அது சார்ந்து இவர்கள் எந்த விடயத்திலும் செயற்படவும் இல்லை என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
இனிமேலும் அரசாங்கம் செயற்பட மாட்டார்கள் என்பதை தன்னுடைய உரையினூடாக வெளிநாட்டு அமைச்சர் தெளிவுபடுத்தியிருப்பது இலங்கையை தான் காப்பாற்றுவதாக அல்லது இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கான உரையாகத்தான் நிகழ்த்தியிருப்பது போன்று அவர் காட்டியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
ஆகவே அவருடைய இந்த கருத்து இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமையை பேணுகின்ற நடவடிக்கைகள், அதே போன்று யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறலுக்கான, நீதிப் பொறிமுறையை இவர்கள் எப்போதும், உள்ளக பொறிமுறையின் ஊடாக வழங்கப் போவதில்லை என்பதற்கு சர்வதேச சமூகத்துக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தாமாக வலிந்து அவற்றை செயல்படுத்த போவதில்லை என்பதையும், சர்வதேச நாடுகளினுடைய தலையீடு இல்லாமல் அல்லது ஐநாவினுடைய தலையீடு இல்லாமல் சர்வதேச நீதி பொறிமுறைக்கு முன்னால் இலங்கையை நிறுத்தாமல் இவர்கள் எந்த நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுக்க போவதில்லை என்பதை அவருடைய உரை தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது.
ஆகவே இதன் அடிப்படையில் சர்வதேச சமூகம் காத்திரமான, உறுதியான முறையிலே சர்வதேச நீதிப் பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்த செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான ஒரு பரிகார நீதியையும், மீள நிகழாமையையும், உறுதிப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்