ஐ.நா. சபையில் கூறிய கூற்றை ஜனாதிபதி மறுத்து நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலே ஐநா சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதிலே ஒன்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது ஜனாதிபதியாக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐநாக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆகவே பிரதமராக இருந்து ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்னை பொறுத்தமட்டிலே சட்டங்கள் மாறுகின்றது எல்லாம் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையாகத்தான் வரும் என்பது என்னுடைய கருத்து.

ஆகவே ஜனாதிபதி அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ஜனாதிபதி நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

அதை விட ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ் மக்களை, தமிழ் இனத்தை, ஏன் இலங்கை நாட்டையே குட்டிச்சுவராக்கிய மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை அவர் செய்து கொண்டு இருப்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

அந்தவகையிலே இந்த சட்டங்களின் ஊடாக ஜனநாயக நீரோட்டத்திலே இந்த குடும்பத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவது என்பது உண்மையிலே அந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தான் காணக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அந்த மக்கள் இந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட அந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள்.

தற்போது புதிய ஜனாதிபதியாக ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அந்த போராட்டத்தின் பின்னணிதான். ஆகவே மகிந்த குடும்பத்தை எதிர்க்கின்ற வகையிலேதான் இந்த போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது இந்த சட்டங்களின் ஊடாக போராடியவர்களை கைது செய்து சிறையிலே அடைப்பது என்பது மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை ஜனாதிபதி செய்ய துணிகிறார் என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

அந்தவகையிலே இந்த விடயத்திலே மக்களினுடைய ஜனநாயக போராட்டத்தின் ஊடாக தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தார். ஆகவே அந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதனை கூறி கொள்ள விரும்புகிறேன் என்றார்.