இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையின் ஊடகச்சுதந்திரத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானத்திற்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார ரீதியில் பொது மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமல் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அண்மையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு 2500 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாக சமூக மட்டத்தில் பேசப்படுகிறது.
அக்கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்தரப்பினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என குறிப்பிட்டார், பிரதமரின் சவாலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.
எத்தேர்தலில் போட்டியிடவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.தேர்தலை நடத்த அரசாங்கம் தான் தயாராகவில்லை.
எரிபொருள் விலையேற்றம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.
டொலர் நெருக்கடி,உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் என்ற இரு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் கண்மூடித்தனமான வகையில் எரிபொருள் விலையை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றிற்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.அறிக்கையின் உள்ளடக்கம் பாராளுமன்றில் இரு நாட்களாவது விவாதிக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் ஊடகச்சுதந்திரத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.