மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதே இந்த வருடத்துக்கான எமது கருப்பொருளாக இருக்கிறது.
அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.
சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு இன்று யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று. எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவுகூருகின்றோம்.
இந்த மனித உரிமைகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்த ஆவணம் 1948 டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலே நிறைவேற்றப்பட்டு, அனைத்துலக மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக்கூடிய ஓர் ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களின் உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.
சகல மக்களையும் ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே, சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.
இந்த வருடத்துக்கான தொனிப்பொருளில் எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் இந்த கௌரவம், சுதந்திரம், நீதி என்பது முக்கியமானதாகும். ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதில் பல சவால்கள் இருக்கின்றன.
குறிப்பாக அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
எனவே அரசுடன் சிவில் சமூகங்களும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதே இந்த வருடத்துக்கான எமது கருப்பொருளாக இருக்கிறது என்றார்.