பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளே மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் செவ்வாய்க்கிழமை (நவ.06) இடம்பெற்ற நீண்ட, வட்டமேசை கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , நீண்டகால அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியுடன் இணைந்ததான இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.
உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் , ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் ஷிக்சின் சென், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கலாநிதி. உர்ஜித் பட்டேல் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அத்தோடு பிரதமர் தினேஷ் குணவர்தன, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.