ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு ரெலோ அழைப்பு

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்தெந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களை அரசாங்கம் கையகப் படுத்தி வருகின்ற சூழலை தடுத்து நிறுத்தவும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பாதுகாக்க வேண்டி ஆரம்பகட்ட மெய்நிகர்  இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கௌரவ தமிழ் தேசிய கட்சி தலைமைகளுக்கு 

ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு 

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் பின்னராக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் சிக்கல் மிகுந்த பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்து நிற்கிறோம். 

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அரசாங்கம் எமது தாயக பரப்பில் காணி நிலங்களை அபகரித்து வருகிறது.  தொல்லியல், அபிவிருத்தி,  மாவலி திட்டம்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல காரணங்களை கூறினாலும் அடிப்படையிலேயே  திட்டமிட்ட குடியேற்றங்களை குறிவைத்த நடவடிக்கைகளாக இவை அமைந்திருக்கின்றன. அதேபோன்று மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களை மெதுவாக அரசாங்கம் கையகப் படுத்தி வருகின்ற சூழலையும் காணுகிறோம்.  இவற்றை தடுத்து நிறுத்தவும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது.

 சர்வதேச சூழலிலேயே எமக்கு சார்பான பல விடயங்களுக்காக வல்லரசு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இவ்வேளையில் நாம் ஒருமித்த நிலைப்பாட்டில் அரசியல் விடயங்களை தாயகப் பரப்பில் கையாள்வதன் மூலம் சாதகமான உள்ளக அரசியல் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முடியும். 

 ஆகவே காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு எந்தெந்த விடயங்களில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஆகிய நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் வினையாற்ற முடியும் என்ற ஆரம்பகட்ட மெய்நிகர்  இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு 

உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். 

தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களை தாண்டி செயல்படும் நோக்கத்திலேயே இந்த அழைப்பு விடுக்கப் படுகிறது. 

நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை 27-06-2021 மாலை 5.00  மணிக்கு இச்சந்திப்பில் கலந்து கொள்ள உங்கள் சம்மதத்தை எதிர்பார்த்து இருக்கும் 

செல்வம் அடைக்கலநாதன் பா.உ

தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்