ஒரு கடிதத்தால் வந்த ஒற்றுமை? Elanadu Editorial

ஆறு கட்சிகள் இணைந்து ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு அரிய நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. ஆறு பிரதான கட்சிகள் அண்மையில் இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தன. ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்ற கட்சிகள் பலவும் ஒரு குடையின் கீழ் இணைந்திருக்கின்றன. யுத்தம் நிறைவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். மக்கள் இதனையே விரும்பியிருந்தனர். மக்கள் தமிழ் தேசிய கட்சிகளிடம் அடிப்படையில் ஒற்றுமையே எதிர்பார்க்கின்றனர்.

கட்சிகள் ஒற்றுமையாக நிற்கும் போது, அதனை இருகரம் கூப்பி வரவேற்கின்றனர். ஒற்றுமை சீர்குலையும் போது, அவர்களும் சிதறிப் போகின்றனர். ஒரு மக்கள் கூட்டம் நம்பிக்கையிழக்கின்ற போது, அவ்வாறான உடைவுகளே ஏற்படும். தமிழ் தேசிய கட்சிகள் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கைகளே கடந்த பொதுத் தேர்தலின் போது, மக்கள் சிதறிப் போவதற்கான பிரதான காரணமாக இருந்தது. இதனையே அரச ஆதரவு தமிழ் கட்சிகளும் சிங்கள தேசிய கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டன. ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். கடந்த பொதுத் தேர்தலின் போதும் அதுதான் நடந்தது. தமிழ் தேசிய ஊர் இரண்டு பட்டது. மக்களும் உடைந்து போனார்கள். அதனை தென்னிலங்கை அறுவடை செய்துகொண்டது. இனியும் உடைபட்டால் அது தென்னிலங்கைக்கே பயன்படும். தென்னிலங்கை எப்போதுமே, வென்று கொண்டிருக்க வேண்டுமென்று நினைப்போர், நிச்சயம் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களாகவே இருப்பர்.

ஆறு கட்சிகளின் கோரிக்கை எவ்வாறான அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும்? ஏற்படுத்துமா? – என்னும் கேள்விகளுக்கு அப்பால், ஆறு கட்சிகள் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் சில விடயங்களில் ஒன்றுபட்டு செயற்பட எத்தனிக்கின்றன. இன்றைய காலத்தில் இது அவசியமான ஒன்று. பொதுவாகவே தமிழ் சூழலில் ஒரு கட்சி அல்லது ஒரு அணி ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது, அதனை திட்டமிட்டு எதிர்க்கும் ஒரு தரப்பும் இருக்கும். அதுவரை அமைதியாக இருப்பவர்கள் திடிரென்று தேசிய உத்வேகம் பெற்றுவிடுவர். பின்னர் – துரோகிகள், முகவர்கள், ஒட்டுக் குழுக்கள், கூலிப்படைகள் என்னும் கற்கள் தாராளமாகவே மற்றவர்கள் மீது வீசப்படும். உண்மையில் மக்கள் ஏமாந்து போனவர்கள் என்னும் எண்ணத்தில்தான் இவ்வாறான கற்கள் வீசப்படுகின்றன. இதிலுள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் – இவ்வாறு கூறுபவர்கள் அனைவருமே முன்னர் பல்வேறு இடங்களில் – பல்வேறு சந்தர்பங்களில் இணைந்து செயற்பட்டவர்கள். இன்று மற்றவர்கள் மீது கற்களை வீசும் அனைவருமே தமிழ் மக்கள் பேரவையில் ஒன்றாக இருந்தவர்கள். ஒரு மாற்றுத் தலைமையை நோக்கி செயற்படுவதற்காக தங்களுக்குள் அவ்வப்போது, சிரித்துப் பேசியவர்கள். அப்போது, இந்த வசைச் சொற்களுக்கு என்ன நடந்தது?

உண்மையில் துரோகி, முகவர், ஒட்டுக்குழு, கூலிப்படை இவ்வாறான சொற்களுக்கு தமிழ் அரசியலில் எவ்விதமான பெறுமதியும் இல்லை. தமிழ் மக்கள் மந்த புத்தியுள்ளவர்கள் என்னும் எண்ணத்தில்தான் இவ்வாறான சொற்களை சிலர் மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகின்றனர். இது ஒரு ஆபத்தான போக்கு. இதனை மக்கள் கண்டிக்காவிட்டால், சிவில் சமூகங்கள் தட்டிக் கேட்காவிட்டால் – ஒரு வேளை இவ்வாறான கற்கள் மக்களை நோக்கியும் வீசப்படலாம். ஒரு கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவருமே துரோகிகள், முகவர்கள், விலைபோனவர்கள் என்றும் சிலர் வாதிடும் சூழல் உருவாகலாம். இது ஒரு ஆபத்தான பாசிச போக்காக இது உருவெடுக்கலாம். இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் விழிப்பாக இருப்பதை தவிர இப்போதைக்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை. மக்கள் தங்கள் விழிப்பை இழக்கும் போதே – மக்கள் இலகுவாக ஏமாற்றப்படுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்கு துணை போபவர்கள் எவ்வாறான கொள்கைகளை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இறுதியில் அப்பாவி மக்களின் நம்பிக்கைகள் சுரண்டப்படுகின்றன என்பது மட்டும்தான் உண்மை.