ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்: தமிழ்மக்களுக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

நல்லூரில் இடம்பெற்று வரும் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும்-17ஆம் திகதி புதன்கிழமை கிட்டுப் பூங்காவிலிருந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் திடல் வரை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு மாணவர்களாகிய நாம் தீர்மானித்துள்ளோம். எனவே, தமிழ்மக்களின் நீதி மற்றும் உரிமைகளை வலியுறுத்துவதற்கான இப் போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை-10 மணியளவில் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்… எனவும் மாணவர் ஒன்றியம் தமிழ்மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை(15) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி வேண்டி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான இதுவரையிலான காலப்பகுதியில் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த-28.02.2021 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நல்லூர் ஆலய வீதியில் ஆரம்பித்தனர்.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல், தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் போன்ற தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப் போராட்டத்திற்கு மதகுருமார், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.