“ஒரே நாடு – ஒரே சட்டம்” செயலணி சபாநாயகர், பாராளுமன்ற செயலாளரை சந்தித்தது

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது.

செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக் கூடாது என்பதை தேசியக் கொள்கையாக சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை கருத்திற்கொண்டு, அந்தக் கருத்தியலை ஆய்வு செய்ததன் பின்னர், நாட்டில் அதனை அமுல்படுத்துவது தொடர்பான கருத்தியல் பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்பிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு செயலணி நியமிக்கப்பட்டது.

சமீபத்தில் அதன் பதவிக்காலம் 2022-02-28இல் இருந்து 03 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.

செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு ஏற்ப பல்வேறு தொழில் வல்லுநர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்வேறு மதக் குழுக்கள், பல்வேறு இனத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தபால், மின்னஞ்சல் மூலமும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள செயலணியின் அலுவலகத்திற்கு வருகை தந்து, அவர்களின் கருத்துக்களை வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைத்தனர்.

மேலும், செயலணியின் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அப்பிரதேச பல்வேறு இனக் குழுவினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

தற்போது 06 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில், மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 03 மாகாணங்களில் உள்ள மக்களின் கருத்துக்களும் பெறப்படும் எனவும் செயலணி தெரிவித்துள்ளது.