ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை எமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வருகை தந்த 4 அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவிதா ரதீஸ்வரனும், யாழ்மாவட்டத்தினை சேர்ந்த ஸ்ரீ நிலோயினியும் இந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டனர்.
நான்கு அதிகாரிகளில் ஒருவர் கொழும்பு தலைமையகத்தில் இருந்தும் ஏனைய மூவரும் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் இருந்து வந்தும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைக்கு பொறுப்பானவர்கள். அதில் மனித உரிமை, மத சுதந்திரம் மற்றும் நீதி பொறிமுறைகளை என வேறு வேறு துறைகளிற்கு பொறுப்பானவர்கள்.
அந்த வகையில், எமது துயரங்களை மனம் விட்டு அவர்களிடம் தெரிவித்தும் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை பொறுமையாகவும், விளக்கமாகவும் கூறியிருந்தோம்.
அத்துடன் ஓ.எம்.பி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் அத்துடன் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை குறித்தும் அதிருப்தியை வெளியிட்டோம்.
அவர்கள் நாம் கூறியவற்றை பொறுமையாக கேட்டனர். நம்பிக்கை தரும் விதமாக நாம் உரையாடியதன் காரணமாக எமது பேச்சுவார்த்தையை 1 மணித்தியாலங்களில் முடித்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.