கச்சத்தீவு ஒப்பந்தத்தினால் இரு நாட்டு மீனவர்களின் நட்புறவில் பாதிப்பு – ஜீவன் தொண்டமான்

கச்சத்தீவு உடன்படிக்கையின் பின்னரே இலங்கை – இந்திய மீனவர்களின் நட்பில் பாதிப்பு ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தெரிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளரான செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை தமிழர்களின் நலன் விடயங்கள், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு உடன்படிக்கை முறையானதாக அமையாததன் காரணமாகவே இரு நாட்டு மீனவர்களின் நட்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வரை சந்தித்த பின்னர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்ததாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முதல்வருடன் கலந்துரையாடியதாகவும் இது குறித்து பரிசீலிப்பதாக தமிழக முதல்வர் கூறியதாகவும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறித்த குழுவினரால் தெரிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.