கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம்: தமிழக முதல்வர் தெரிவிப்பு

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்று கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை வௌியிட்டார்.

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்

பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.