தனிநாட்டுக்கு போராடுவதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எது சாத்தியம் என்பதை புரிந்துதான், நாங்கள் 6 கட்சிகள் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரியுள்ளோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா.
இன்று (16) யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் 6 தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1988 நவம்பரில் பிரேமதாசா ஜனாதிபதியானதும் விடுதலைப் புலிகளுடன் பேச்சை ஆரம்பித்தார். இந்த பேச்சில் என்ன பேசப்பட்டது என எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. பேச்சின் மையப்பொருள், அப்போது வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையை எப்படி திருப்பி அனுப்புவது என்பதுதான்.
விடுதலைப் புலிகளிற்கு, தமிழீழத்திற்கான போராட்டத்தை தொடர்வதற்கு அந்த தேவையிருந்தது.
பிரேமதாசவை பொறுத்தவரை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை சிங்கள தீவிரவாதியாக எதிர்த்தவர்.கையெழுத்திட இந்திய பிரதமர் வந்த போது, அந்த நிகழ்வை புறக்கணித்தார்.
இரு தரப்பிற்கும் பொதுவான நலனிருந்தது. அமைதிப்படை வெளியேறிய பின்னர் அந்த பிணைப்பு அல்லது கருத்தொற்றுமை அடிபட்டு போய்விட்டது. இதுதான் பிரேமதாச காலத்தில் நடந்தது.
அதன்பின்னர் விஜயதுங்க வந்தார். அவரைப்பற்றி பேசுவதை விட, பேசாமல் விடலாம்.
அதன் பின்னர் சந்திரிகா அம்மா வந்தார். அவர் 1994 கார்த்திகையில் மகத்தான வெற்றியை பெற்று வந்த பின்னர், பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஒரு வருடம் புலிகளுடன் தேன்நிலவு நீடித்தது. 1995 இல் திருகோணமலையில் புலிகள் தாக்குதல் நடத்தியதுடன், அறுந்து போனது.
சந்திரிகா – புலிகள் பேச்சு, பூர்வாங்க நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது என்றுதான் கொள்ள முடியும் .
பிறகு யுத்தம் நடந்த போது, 2000 இல் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கிற்கு சில அதிகாரங்களை கொடுத்து, இலங்கையை பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமாக மாற்றும் திட்டத்தை கொண்டிருந்தார். அதில் முன்னேற்றகரமானது. ஆனால் மற்ற விடயங்களில், பௌத்தத்திற்கு முன்னுரிமை, மத்திய அரசு சில விடயங்களை தக்க வைத்திருந்தது. குறிப்பாக காடுகள் மத்திய அரசின் கீழிருக்குமென்றும், வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பேரில் 3 மாநிலங்களாக பிரிக்கும் திட்டத்தை முன்வைத்தார்.
அப்போது தமிழ் கட்சிகள் எதுவும் அதனை ஆதரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.கவினர் அந்த பிரேரணையை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீ வைத்தனர். நாடாளுமன்றத்திற்குள் ஆவணம் தீ வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது.
2001 ஒக்ரோபர் மாதத்தில் ரணில் ஆட்சிக்கு வந்த பின் பேச்சுக்கள் மீள ஆரம்பித்தன. பேச்சு நகர்ந்து கொண்டிருந்த போது, சந்திரிக்கா முட்டுக்கட்டையிட்டார்.
புலிகள் முன்வைத்த உள்ளக தன்னாட்சி அதிகாரசபை யோசனை கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சந்திரிகா அதை தகர்ப்பதில் வெற்றிகண்டார். உயர்நீதிமன்றமொன்று துணை போனது.
ஒரு பாடம் தமிழ் மக்களிற்கு மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு கட்சி முன்வைத்தால் மறு கட்சி அதை எதிர்க்கும். சந்திரிகா முன்வைத்தால் ரணில் எதிர்த்தார். ரணில் முன்வைத்தால் சந்திரிகா எதிர்த்தார்.
பின் மஹிந்தவின் காலம். அதைப்பற்றி என்ன இருக்கிறது பேச?. யுத்தம் நடந்த போது 13 பிளஸ் என்றார். யுத்தத்தின் பின்னரும் அதையே சொன்னார். என்ன நடந்தது.
சிங்கள தலைவர்கள் தமிழர்களை ஏமாற்றியே வந்திருக்கிறார்கள். எமக்கு 13வது திருத்தத்தை நாடுவதை தவிர இப்பொழுது வேறு தெரிவுகள் இல்லை.
இன்னொரு தெரிவு உள்ளது. தனிநாட்டுக்கு போராடுவது. அதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. 30 வருட காலத்தைவிட நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எதுசாத்தியம் என்பதை புரிந்துதான், நாங்கள் 6 கட்சிகள் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரியுள்ளோம்.
13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா? இதற்கும் அதே கதிதானா என நீங்கள் கேட்கலாம். அது இந்தியாவின் பிரச்சனை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது தமிழர்கள் அல்ல. இந்தியாவும், இலங்கையுமே கையெழுத்திட்டன. இந்தியாவே அதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்னொரு வாய்ப்பு உள்ளது. 1986ஆம் ஆண்டு வெளியான ரெலோவின் வெளியீடான ரெலோ ரைம்ஸ் என்ற ஆங்கில இதழில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களையும், அபிலாசைகளையும் தொட்டு ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும், தமிழீழ மக்களின் தேசிய அபிலாசைகளும் பிரித்தெடுக்க முடியாதவை என குறிப்பிட்டிருந்தேன். அந்த கூற்றிற்கு வலுச்சேர்க்கும் சூழலே சீனாவின் தயவில் ஏற்பட்டுள்ளது.
சீனத்தூதர் இங்கு வந்து, இந்தியா எவ்வளவு தூரமென கேட்டது, தூங்கும் புலியை தட்டியெழுப்பும் சம்பவம்.
இப்பொழுது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும், தமிழீழ மக்களின் தேசிய அபிலாசைகளும் முன்னெப்பொழுதுமில்லாதளவில் நெருங்கி வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம்?
தம்பி கஜேந்திரகுமார் சொல்வதை போல சமஷ்டியொன்றும் கிடைக்காது. நாங்களும்தான் சமஷ்டியை பற்றி பேசுகிறொம். சிங்கள தலைவர்கள் ஒருபோதும் சமஷ்டிக்கு சம்மதிக்க மாட்டார்கள்.
அப்படியாயின் ஏன் சமஷ்டியை கோருகிறோம் என கேட்கலாம். இன்றைக்குள்ள அரசியல் சூழலில் படிப்படியாகத்தான் முன்னேறி செல்லலாம். 13வது திருத்தம் ஒரு ஆரம்பப்புள்ளி.
எங்களது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தம்பிகள் முன்னொரு சந்தர்ப்பத்தில் சொன்னதை போல, ஒரு ஆரம்பப்புள்ளி. சமஷ்டியை நாம் விட்டுவிடப்போவதில்லை. இந்தியாவின் நலன்கள், இந்து சமுத்திர பாதுகாப்பு போட்டிகள் எமது மக்களின் விடுதலைப் பயணத்தை வழிநடத்தும்.
நம்பிக்கை மட்டும் போதாது. அதற்கு என்ன பொறிமுறை, ஸ்தாபன கட்டமைப்பு, தலைமைத்துவம், மக்களை வழிநடத்தும் ஆற்றல் எல்லாம் எங்களிடம் உள்ளதா என்பது அடுத்த கேள்வி.
வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டை வரை வாகனங்களை விட்டு ஆட்களை ஏற்றியிறக்கியிருந்தால் எள்விழுந்தால் எண்ணெயாகும் அளவிற்கு மக்கள்கூட்டமிருந்திருக்கும். நாம் அதில் ஆர்வப்படவில்லை. ஆனால் மக்கள் அரசியல்மயப்பட வேண்டும். விடுதலை விரும்பும் மக்களிற்கு இந்த அரசியல் ஆர்வம் போதாது.
நாம் அனைவரும் பிரிந்து நின்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்காமல், ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும். உடையது விளம்பேல் என்பார்கள். நாம் விளம்ப தேவையில்லை. காலம் பல தெரிவுகளை எமக்கு முன் கொண்டு வரும். நாம் பொறுமையாக இருந்தால் பொருத்தமானதை அடையாளம் காணலாம்.
நேற்று ரஷ்ய பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. உக்ரைனில் ரஷ்ய மக்கள் அதிகம் வாழும் 2 பிரதேசங்களை தனிநாடாக்குமாறு அரசை கோரியுள்ளது என்றார்.