கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு

பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் செயலாளர் சந்திரா சாப்டரின் புதல்வரும் ஜனசக்தி குழுமத்தின் தலைவருமான தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறக்கும் போது அவருக்கு 51 வயது.

நேற்று பிற்பகல் குருந்துவத்தை மல் வீதி வீட்டில் இருந்து பல கோடி ரூபா கடனாகப் பெற்றுக் கொடுக்கவுள்ள ஒருவரை சந்திக்கச் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு குறித்த நபர் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், தலைவரின் தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் பொரளை மயான அருகில் இருப்பதாக மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு சமிஞ்ஞை கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரின் மனைவி, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில், காரின் சாரதி இருக்கையில் குறித்த நபரின் கைகள் கப்பியினால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாகவும், கழுத்து ஒரு வயரினால் இறுக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரி மயானத்தில் பணிபுரியும் தொழிலாளியின் உதவியுடன் தலைவரின் கைகளிலும் கழுத்திலும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கம்பிகளை அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

தலைவரின் காரை விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் குறித்த நிறுவனத்தில் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்று முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைவரை கடத்திச் சென்ற சிலர் அவரை மயானத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.ஜே.எம்.ஆர். சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.