இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த போது கறுப்புச் சந்தையைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து தற்போது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
சிக்கலான கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்று இதற்கு நிதியமைச்சர் பதிலளிக்க, நீங்கள் சொன்ன கருத்தினால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இதற்குப் பதிலளித்தால் இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும் என்று கூறி முடித்தார். ஆனால் இந்தக் கருத்தை விளக்கப்படுத்துவதற்கான நல்ல சந்தர்ப்பம் இது என்று ஊடகவியலாளர் மீண்டும் குறிப்பிட, அப்படியொன்று நடக்கவில்லை என்று சொன்னால் கதை முடிந்துவிடும் என்று நழுவல் போக்கில் பதிலளித்தார்.
கறுப்புச் சந்தையின் மூலம் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சிங்கள நாளிதழுக்கு சொன்ன கருத்து சர்ச்சையாகியுள்ளது.
இந்தக் கருத்தை மறுக்காத பசில் ராஜபக்ச, ஊடகவிலாளரின் அந்தக் கேள்வியால் திக்குமுக்காடிப் போனார்.
அத்துடன், யுத்த காலத்தில் நடந்த ஏராளமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் அவற்றை பேசாமல் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அதனை மூடிமறைக்க முயற்சித்தாலும், வடகொரியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டார் என்ற கருத்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், பணச் சலவையில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் ராஜபக்ச குடும்பத்தில் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. பண்டோரா ஆவணங்களின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்திருந்தன. இதுகுறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், அதுகுறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படுவதைக் காண முடியவில்லை என குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பணச் சலவை மற்றும் கறுப்புப் பயணத்தைப் பயன்படுத்தி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல்கள் அல்லது நடந்த சம்பவங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் சர்ச்சைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக மேலும் புதிய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் உருவாக்கி வருவதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.