கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து யாழ்.நகரில் சுவரொட்டிகள்

தமிழ்மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றையதினம் இலங்கை வரலாற்றில் தமிழ்மக்கள் மறக்க முடியாத ஒரு முக்கியமான நாள் எனவும், கடந்த-39 வருடங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பில் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட நாள் எனவும் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 39 ஆம் ஆண்டுகள் கடந்த போதும் இதற்கான நீதியையோ, தமிழ்மக்களுக்கான உரிமைகளையோ இதுவரை சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுத் தரவில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்படுவதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.