காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்து கோட்டாவின் கருத்தை ஒத்திருக்கிறது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இதுகுறித்துத் தமது கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.

படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல்போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கு எதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருப்பதாக ராய்ட்டர் செய்திச்சேவையில் கடந்த வியாழக்கிழமை வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இறுதிக்கட்டப்போரின்போது தமது உறவினர்களைப் படையினரிடம் கையளித்ததாகவும், அவர்கள் காணாமல்போயிருப்பதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

அதேபோன்று படையினரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னரும் சரணடைந்ததன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக்கட்டமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. அவைகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் அறியவில்லையா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பில் தாம் கரிசனையடைவதாகத் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மகேஷ் கட்டுலந்தவின் கருத்து கடந்த 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட கருத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான பிரதிபலிப்பாக இலங்கை தமது உள்ளகப்பொறிமுறையை ‘விளம்பரப்படுத்திவரும்’ வேளையிலேயே இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.