இராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக எதிர்ப்பு பதாகைகளை நீக்கியமையினால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, காலி கோட்டையில் சாத்வீக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் சாத்வீக வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்போது, அங்கு பிரவேசித்த ஆயுதம் ஏந்திய இராணுவ அதிகாரிகள், பலவந்தமாக தம்மிடம் இருந்த எதிர்ப்புப் பதாகைகளை நீக்கி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகளின் இவ்வாறான நடத்தையினால் சுதந்திரமாக கருத்துத்தெரிவிக்கும் உரிமை, சுதந்திரமாக ஒன்றுகூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
அத்துடன், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையினால், 5 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.