கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல, கருணாரத்ன, நீதிபதி தம்மிக கணேபொல ஆகியோர் இன்று (14) விலகியுள்ளனர்
இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக கணேபொல இந்த வழக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால், உரிய பீடத்தை நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஜனாதிபதிக்கு உரிய மனுவை அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மனு விசாரணை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.