1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம், 27 ஆம் திகதிகளில் சிங்களக் காடையர்களால் வெலிக்கடைச் சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும்,வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஆரம்பகாலத் தலைவர் குட்டிமணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி நடராஜா தங்கத்துரை, முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன், மற்றும் அவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்து 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ இன்று புதன்கிழமை(27.7.2022) யாழ்.மாவட்ட ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெளன வணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரையும் இடம்பெற்றது.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் ரெலோவின் யாழ்.மாவட்டத் துணை அமைப்பாளரும், யாழ். மாநகரத் துணை மேயருமான து.ஈசன், ரெலோவின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவரும், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன், ரெலோவின் நல்லூர்த் தொகுதி அமைப்பாளரும், நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,ரெலோவின் யாழ். பணிமணைப் பொறுப்பாளரும், யாழ்.நகரப் பகுதிப் பொறுப்பாளருமான மு.உதயசிறி,ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.