வடக்கிலோ அல்லது தெற்கிலோ ஜுலை 5 அல்லது 6 ஆம் திகதியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளதாக அறிவித்து பொலிஸ் மா அதிபரினால் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கரும்புலிகள் நினைவு தினத்தை இலக்காகக் கொண்டு வெளிநாட்ட உளவுப் பிரிவின் ஒத்துழைப்புடன் குறித்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை போன்று காட்ட முயற்சிக்கப்படுவதாகவும் அனுரகுமார திஸாநயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பான கடிதம் தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் எவ்வாறு கிடைத்தன என்ற சரியான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அனுரகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.