குருந்தூர் மலை விவகாரம்: அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சனை, காணிப்பிரச்சனை, அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகின்றது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம்.

இச் சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். அத்துடன் இப்பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு, அமெரிக்காவும் அழுத்தங்களை பிரயோகிக்கும்” என ஜுலி சங் தெரிவித்துள்ளார்.