குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுவதற்கு நிதியமைச்சர் பஷிலே காரணம் – பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள்

நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தற்போது முழுமையாக இல்லாதொழித்து விட்டார்.

குறுகிய காலத்தில் அரசாங்கம் மக்களால் வெறுக்கப்படுவதற்கு நிதியமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் குறிப்பிட்டனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியால் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்கள்,உறுப்பினர்கள் ஒன்றினைந்து நேற்று கொழும்பில் விஷேட ஊடக சந்திப்பை நடத்தினர்.

இந்த ஊடக சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார,விஜயதரணி தேசிய சபையின் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர்,லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன கம்யூனிச கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டி.யு குணசேகர,கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க,

சுதந்திர கட்சியின் பிரதிநிதியொருவர், இராஜங்க அமைச்சர் ஜயந்த சமரவீர,பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில் உட்பட பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பங்காளி கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து தடையாக செயற்படுவதால் அவர் பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து வேறுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டார்.

நிதியமைச்சரின் செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் காணப்படுகிறதே தவிர நெருக்கடியை சீரமைக்கும் தன்மையில் அமையவில்லை.

தனக்கு தான் அனைத்தும் தெரியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு செயற்படுவதால் அவர் பிற தரப்பினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பதில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ பதவி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெயரளவில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பதவி அரசியல் குறித்து அனுபமில்லாத பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முறையாக பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பதவி அமைச்சர் டலஸ் அழகப்பெருமளவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் புலமையின் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியில் பதவி வழங்கப்படவில்லை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கருத்திற்கு இசைபாடும் தரப்பினருக்கு மாத்திரம் கட்சியில் பதவி வழங்கப்பட்டன.

அரசாங்கததிற்கு நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மழுங்கடித்து குறுகிய காலத்தில் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழலை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவே தோற்றுவித்தார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பொருளாதார பாதிப்பிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும்.பங்காளி கட்சிகளின் கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் அவர் மதிப்பளிப்பதில்லை. தன்னிச்சையாக செயற்பட்டு தீர்மானங்களை முன்னெடுப்பதால் நாடும்,நாட்டு மக்களும் தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் குறித்து நிதியமைச்சர் அக்கறை கொள்ளவில்லை.மக்களின் பிரச்சினை குறித்து கருத்துரைத்ததால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்திற்கு அமைய அரசாங்கம் செய்ற்படவில்லை.அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் இனி ஈடுப்படுவோம் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்தார்.