கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத்தன்மை ? ELANADU Editorial

தமிழ் மக்கள் ஒரு அரசு இல்லாத தரப்பு. அரசு இல்லாத தரப்புக்களுக் கான இராஜதந்திர வாய்ப்புக்கள் மிகவும் பலவீனமானவை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள்தான், தமிழ் மக்களுக்கான அரசியலை சர்வதேச அரங்கு களில் நீர்த்துப்போகாமல் பாதுகாத்துவருகின்றன. கொழும்பின் விடாப்படியான அணுகுமுறைகளும் இதற்கொரு காரணமாகும். கொழும்பின் ஆட்சியாளர்கள் சில விடயங்களில் முன்னேற்றத்தை காண்பிப்பார்களாயின், சர்வதேச அவதானமும் நாளடைவில் நீர்த்துப் போய்விடும். இன்றைய நிலை யில், தமிழர் களின் சர்வதேச குரலாக தொழில்படும் புலம்பெயர் சமூகமும் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை செலுத்திவருகின்றது.

ஆனால், மறபுறமாக தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களின், இராஜதந்திர அணுகுமுறைகள் எவ்வாறிருக்கின்றன? சில தினங்களாக இடம் பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் சிந்திப்பதாயின், ‘பனையால் விழுந்த வரை மாடு ஏறி மிதித்த’ – கதையாகவே தமிழ் தேசியவாத தரப்புக்களின் இராஜ தந்திர அணுகுமுறை இருக்கின்றது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற் கான வாக்கெடுப்பின்போது, ஏற்பட்ட சில சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எமக்கு கிடைக் கும் தகவல்களின்படி, இந்திய தூதரக சர்ச்சையால், ஏனைய இராஜதந்திரிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மத்தியில், கூட்ட மைப்பின் நம்பகத்தன்மை, பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இராஜதந்திர தொடர்புகள் என்பவை பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப் படையில் இடம்பெறும் விடயங்களாகும். நம்பகத்தன்மை போய்விட்டால், அதன் பின்னர் அதனை மீளவும் கட்டியெழுப்புவது மிகவும் சவாலானதொரு விடயமாகும்.

2009இற்கு பின்னரான காலத்தில், சம்பந்தன் தலைமையில் கடந்த 13 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களில், பல்வேறு இராஜதந்திர சறுக்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், பாரதூரமானது இந்திய பிரதமர் சிறி நரேந்திர மோடியுடனான சந்திப்பை அற்ப காரணங்களை கூறி நிகராகரித்தமை. கடவுசீட்டைக் காணவில்லை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் என்று கூறியே, சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். 134 கோடி மக்களின் தலைவர், உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர், தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, அதனை ஒருவர் நிராகரிக்கின்றார் என்றால், அவரின் இராஜந்திர ஆற்றல் தொடர்பில் என்ன கூறமுடியும்?

சில மாதங்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் நிபுணர் குழுவென்னும் பெயரில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு, சுமந்திரன் தலை மையில், மூவரடங்கிய குழுவினர் சென்றிருந்தனர். அதில் சென்ற இருவர், நாடு திரும்பியதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை. அவர்கள் எதற்காக சென்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இந்தப் பயணம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை. நாடு திரும்பியதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் நடுப்பகுதிக்குள் அமெரிக்கா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்பட் டது. ஆனால், அப்படியெதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில், அனைத்துமே தேர்தல் பிரசார நோக்கம் கொண்ட கதைகளேயேன்றி உண்மை களல்ல.

இப்போதும் தங்களுடைய திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக, இராஜதந்திர தொடர்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சீனத் தூதரக சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பில் எவருமே தெரிந்திருக்கவில்லை. உண்மையில், என்ன அடிப்படையில் இராஜதந்திரிகளை கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர்கள் அணுகுகின்றனர்? கூட்டமைப்பின் இராஜதந்திர தொடர்புகள் எவருடைய அனுமதியின் கீழ் கையாளப்படுகின்றன? பதில் இலகுவானது. கூட்டமைப்பில் இராஜதந்திர நெறிமுறையென்று ஒன்றில்லை.
தனிப்பட்ட நபர்களின் விருப்புவெறுப்புக்களின் அடிப்படையிலேயே அனைத்தும்
இடம்பெறுகின்றன. கூட்டமைப்பில் அக்கறையுள்ளவர்கள், இந்த நிலைமையை
மாற்றியமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.