கூட்டமைப்பின் தலைமைத்துவ பலவீனம்? ஈழநாடு Editorial

ஓர் இனத்தை வழிநடத்தும் தலைமை பலவீனமாக இருந்தால், அந்த இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறப் போவதில்லை. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னி ரெண்டு வருட கால அரசியல் நகர்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் இடம்பெறாமைக்கு, கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள குறைபாடுகளே காரணமாகும். ஆனால், இப்போதும் அது அப்படியே தொடர்வதுதான் கவலைக்குரியது.

கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்காவுக்கு நிபுணர் குழுவொன்று சென்று வந்தது. ஆனால், அது பற்றி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி களின் தலைவர்களுக்குத் தெரியாது. இப்போது கூட்டமைப்பு – உலகத் தமிழர் பேரவையின் கூட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆனால், இது தொடர்பில் ஈழநாடு வினவியபோது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்கா சென்றிருந்த நிபுணர் குழுவுடன் புலம்பெயர் அமைப்புக்கள் சார்பில் உலகத் தமிழர் பேரவையும் இணைந்திருந்தது. இது தொடர்பிலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அறிந்திருக்கவில்லை.
இவ்வாறான பல விடயங்கள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றன?
ஒருமுறை நடந்தால் அது தவறுதலானது. பலமுறை நடந்தால் அது திட்ட மிட்ட ஒன்றாகும். இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறு கின்றபோது – ஏன் சம்பந்தன் அமைதியாகவே இருக்கின்றார்? சம்பந்த னால் எதனையும் கட்டுப்படுத்த முடியவில்லையா – அல்லது, சம்பந்தன் அவரின் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டாரா – அல்லது, கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதற்கு சம்பந்தனால் முடியவில்லையா?

ஒருமுறை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு – ஏனையவர்களுக்கு அறிவிப்பது எனது வேலையல்ல, என்றவாறு கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பதிலளித்திருந்தார். தனக்கு தரப் படும் வேலையை தான் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் சம்பந்தனுக்கு தெரிந்தே அனைத்தும் இடம்பெறுவதா கவே, ஒருவர் இதனை புரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது.

சம்பந்தனுக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடக்கிறதென்றால் – எதற்காக சம்பந்தன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை உதாசீனம் செய்கின்றார்? பங்காளிக் கட்சிகளுடன் இணைந்திருக்க அவர் விரும்ப வில்லையாயின், அவர்களை தனி வழியில் செல்லுமாறு சம்பந்தன் கோர வேண்டும். அவ்வாறில்லாது, கூட்டமைப்பாக இருப்பதானால் – அதற் குரிய அரசியல் ஒழுக்கத்துடன் சம்பந்தன் நடந்துகொள்ள வேண்டும்.

 

கூட்டமைப்புக்குள் இடம்பெறும் இதுபோன்ற விடயங்கள், தமிழ் மக்களின் உரிமைநோக்கிய அரசியலை பரிகசிப்புக்கு உரியதாக்கின்றது. இராஜதந்திர தரப்புக்கள் எவரை நம்பி பேசுவதென்னும் நிலைமையை தோற்றுவிக்கின்றது. இது தமிழ் மக்களின் உரிமை நோக்கிய நகர்வு களை மோசமாகப் பாதிக்கக்கூடியது. சம்பந்தன் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அவரின் உடல் நிலை அதற்கு இடம் கொடுக்காவிட்டால் – பொறுப்புக்களை ஏனைய கட்சியினரிடம் பகிர்ந்த ளிக்க முன்வர வேண்டும். இளம் தலைவர்களுக்கு இடமளிக்க வேண் டும்.

கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது – மூன்று கட்சிகள் மன முவந்து வழங்கியிருப்பது. அதனை சம்பந்தன் மதித்து நடக்க வேண்டும்.

 

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக நடந்துகொள்ள வேண்டும். அவர்
கூட்டமைப்பின் தலைவராக நடந்து கொள்ளாமையின் காரணமாகவே, கூட்டமைப்பில் எவரும் எதையும் செய்யலாம் என்னும் நிலைமை
காணப்படுகின்றது. கூட்டமைப்பின் அனைத்து தவறுகளுக்கும் –
அனைத்து பின்னடைவுகளுக்கும் – அனைத்து குழப்பங்களுக்கும் –
அனைத்து உள்முரண்பாடுகளுக்கும், ஒருவர்மீது குற்றம்சாட்ட முடியு
மென்றால், அது நிச்சயம் சம்பந்தனாக மட்டுமே இருக்கமுடியும்.