கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கொரடா புத்திக பத்திரன ஆகியோரும் கூட்டமைப்பின் தரப்பில் தமிழ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சந்திப்பில் நாட்டில் எழுந்திருக்கும் தற்போதைய கடுமையான பொருளாதார சிக்கல், அரசியல் சூழ்நிலை, அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகள், தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள், அரசியல் யாப்பு விடயங்கள், நாட்டின் நிரந்தர மீட்சிக்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம், தொல்லியல் நடவடிக்கைகளினால் ஏற்படும் இன முரண்பாடு என முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.