கொழும்பு பொலிஸ் பதிவு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம். இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன். தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.