கோட்டாபயவின் அழைப்பை புறக்கணித்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு சமூகமளிக்காத 52 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் பிரச்சினைகள் பற்றி பேசிய போதிலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.