இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பினால் தனது பதவியில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
1953 ஆம் ஆண்டு பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்குப் பின்னர் 69 வருடங்களில் தென்பகுதியில் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மக்களின் அழுத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவி விலகினால் செயற்படுவதற்கு ஏதுவாக ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்தினால் ஒருவர் நியமிக்கப்படும் வரை பிரதமரே ஜனாதிபதியாக செயற்பட முடியும்.
இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்து- தற்போது பிரதமராக பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? என்பது குறித்தும் சிக்கல் உள்ளது.
மீண்டும் அவர் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது என்றால் சபாநாயகருக்கு ஜனாதிபதி பதவியை ஏற்கும் அதிகாரம் உள்ளது என்றார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.